Verse 1
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் [TAB]விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய், பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப் [TAB]பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும் பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் [TAB]புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி, தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை [TAB]தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே.
Verse 2
பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் [TAB]பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற, ஏருருவில் மூவருமே யென்ன நின்ற, [TAB]இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது, ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ [TAB]ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற, மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி [TAB]முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே.
Verse 3
திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும [TAB]திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும், பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் [TAB]பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை, ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா [TAB]ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால், கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் [TAB]கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே?
Verse 4
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை [TAB]இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய், செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் [TAB]திசைநான்கு மாய்த்திங் கள் ஞாயி றாகி, அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா [TAB]அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும் [TAB]வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சமே.
Verse 5
ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப [TAB]ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து, எண்மதியுங் கடந்தண்ட மீது போகி [TAB]இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் [TAB]தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு, மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை [TAB]மலர்புரையும் திருவடியே வணங்கினேனே.
Verse 6
அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் [TAB]அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும், சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் [TAB]தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி, நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த [TAB]நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி, புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் [TAB]பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.
Verse 7
வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள [TAB]வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு, வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த [TAB]வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய, கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட [TAB]கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி, பொற்புடைய மலையரையன் பணிய நின்ற [TAB]பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.
Verse 8
நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் [TAB]நிலாத்திங்கள் துண்டகத்தாய்! நிறைந்த கச்சி ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் [TAB]உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும் காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா [TAB]காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய் [TAB]பெருமான்உன் திருவடியே பேணினேனே.
Verse 9
வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் [TAB]மல்லையாய்மதிள்கச்சி யூராய்! பேராய், கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் [TAB]குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான், பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் [TAB]பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா, எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி [TAB]ஏழையேன் இங்கனமே ஊழிதருகேனே.
Verse 10
பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட [TAB][TAB]புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான், என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் [TAB]என்னறிவ னேழையேன், உலக மேத்தும் தென்னானாய் வடவானாய் குடபா லானாய் [TAB]குணபால தாயினாய் இமையோர்க் கென்றும் முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி [TAB]திருமூழிக் களத்தானாய் முதலானாயே.
Verse 11
பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் [TAB]பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள், எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் [TAB]எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும் மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் [TAB]மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய் [TAB]கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே?
Verse 12
நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் [TAB]நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள், நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் [TAB]வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும், அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் [TAB]அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும், எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் [TAB]இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே.
Verse 13
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் [TAB]காமருபூங் கச்சியூ ரகத்தாய்! என்றும், வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் [TAB]வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும், அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், [TAB]மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும், சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று [TAB]துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.
Verse 14
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா [TAB]மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற, அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய [TAB]அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை, விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் [TAB]வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று [TAB]மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே.
Verse 15
கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய [TAB]களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும், அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி [TAB]அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும், சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் [TAB]தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு, மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே [TAB]மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பேதையே.
Verse 16
கன்றுமேய்த் தினிதுகந்த காளாய் என்றும், [TAB]கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே என்றும், மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும், [TAB]வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும், வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும், [TAB]விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய் என்றும், துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் [TAB]துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.
Verse 17
பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் [TAB]பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் [TAB]சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் [TAB]தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு, நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன [TAB]நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.
Verse 18
கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் [TAB]கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம், பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் [TAB]பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன், ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் [TAB]எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும், நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் [TAB]இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே?
Verse 19
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் [TAB]மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் [TAB]அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும், பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் [TAB]பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி, பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள் [TAB]பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.
Verse 20
தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் [TAB]தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி, பேராள னாயிரம் வாணன் மாளப் [TAB]பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க பாராளன், பாரிடந்து பாரை யுண்டு [TAB]பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் [TAB]பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?
Verse 21
மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ [TAB]மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட, எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே [TAB]இருவராய் வந்தாரென் முன்னே நின்றார் கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் [TAB]கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே, அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ [TAB]அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.
Verse 22
நைவளமொன் றாராயா நம்மை நோக்கா [TAB]நாணினார் போலிறையே நயங்கள் பின்னும், செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி [TAB]எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் [TAB]கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும், எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்கு [TAB]இதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே.
Verse 23
உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் [TAB]ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே, தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் [TAB]சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக் கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் [TAB]கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது, புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் [TAB]என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே?
Verse 24
இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் [TAB]இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட, பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் [TAB]பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி [TAB]உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என் பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து [TAB]புனலரங்க மூரென்று போயினாரே.
Verse 25
மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் [TAB]கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும், தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே [TAB]தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் [TAB]என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு, பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே [TAB]புனலரங்க மூரென்று போயினாரே.
Verse 26
தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் [TAB]தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும், பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த [TAB]அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை, ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் [TAB]அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று, நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது [TAB]நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.
Verse 27
செங்கால மடநாரா யின்றெ சென்று [TAB]திருக்கண்ணபுரம் புக்கென் செங்கண்மாலுக்கு என்காதலென் துணைவர்க்குரைத்தி யாகில் [TAB]இதுவொப்ப தெமக்கின்ப மில்லை நாளும் பைங்கான மீதெல்லா முனதேயாகப் [TAB]பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன் தந்தால் இங்கே வந்தினி திருந்துன் பெடையும் நீயும் [TAB]இருநிலத்திலினிதென்பமெய்தலாமே.
Verse 28
தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச [TAB]சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால், மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த [TAB]வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன் பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு [TAB]போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி, என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த [TAB]எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே.
Verse 29
அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை [TAB]அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை, குன்றாத வலியரக்கர் கோனை மாளக் [TAB]கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து வென்றானை, குன்றெடுத்த தோளி னானை [TAB]விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை [TAB]நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே.
Verse 30
மின்னுமா மழைதவழும் மேக வண்ணா [TAB]விண்ணவர்தம் பெருமானே அருளாய், என்று, அன்னமாய் முனிவரோ டமர ரேத்த [TAB]அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை, மன்னுமா மணிமாட வேந்தன் [TAB]மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னியநூல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப் [TAB]பழவி னையை முதலரிய வல்லர் தாமே.
Key Takeaways & AI Summary
This chapter explores the profound teachings of Thirunedunthandakam — The Long Thandaka Metre Hymns. It includes 30 verses detailing core themes like "", "", "".The 4,000 Tamil hymns of the twelve Alwars — the crown jewel of Sri Vaishnava devotional literature, sung at the 108 sacred Divya Desams.