Verse 1
வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.
Verse 2
ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார் நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார் பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.
Verse 3
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார் ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு வோணத் தானுல காளுமென் பார்களே.
Verse 4
உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார் நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார் செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும் அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.
Verse 5
கொண்ட தாளுறி கோலக் கொடுமழு தண்டி னர்பறி யோலைச் சயனத்தர் விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர் அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.
Verse 6
கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர் பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால் ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே.
Verse 7
வாயுள் வையகம் கண்ட மடநல்லார் ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம் பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.
Verse 8
பத்து நாளும் கடந்த இரண்டாநாள் எத்தி சையும் சயமரம் கோடித்து மத்த மாமலை தாங்கிய மைந்தனை உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.
Verse 9
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும் ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.
Verse 10
செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை மின்னு நூல்விட்டு சித்தன் விரித்தஇப் பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே
Verse 11
சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே.
Verse 12
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும் பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள் ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுத லீர்வந்து காணீரே.
Verse 13
பணைத்தோ ளிளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்தார உண்டு கிடந்தஇப் பிள்ளை இணைக்காலில் வெள்ளித் தளை நின் றிலங்கும் கணைக்கால் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.
Verse 14
உழந்தாள் நறுநெய் ஒரோதடா வுண்ண இழந்தா ளெரிவினா லீர்த்துஎழில் மத்தின் பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலை யீர்வந்து காணீரே.
Verse 15
பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு உறங்குவான் போலே கிடந்தஇப் பிள்ளை மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான் குறங்கு களைவந்து காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.
Verse 16
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில் அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன் முத்த மிருந்தவா காணீரே முகிழ்நகை யீர்வந்து காணீரே.
Verse 17
இருங்கை மதகளிறு ஈர்க்கின் றவனை பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடுபர மன்தன் நெருங் குபவளமும் நேர்நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுத லீர்வந்து காணீரே.
Verse 18
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து தந்தக் களிறுபோல் தானே விளையாடும் நந்தன் மதலைக்கு நன்று மழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளியிழை யீர்வந்து காணீரே.
Verse 19
அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து பதறப் படாமே பழந்தாம்பா லார்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளிவளை யீர்வந்து காணீரே.
Verse 20
பெருமா வுரலில் பிணிப்புண் டிருந்துஅங்கு இருமா மருதம் இறுத்தஇப் பிள்ளை குருமா மணிப்பூண் குலாவித் திகழும் திருமார்பு இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
Verse 21
நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான் தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே.
Verse 22
மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே.
Verse 23
வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.
Verse 24
எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர் தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச் செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
Verse 25
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே.
Verse 26
விண்கொ ளமரர்கள் வேதனை தீரமுன் மண்கொள் வசுதேவர் தம்மக னாய்வந்து திண்கொ ளசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர்வந்து காணீரே.
Verse 27
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளிமணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண்முலை யீர்வந்து காணீரே.
Verse 28
மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே.
Verse 29
முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும் சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன் நெற்றி இருந்தவா காணீரே நேரிழை யீர்வந்து காணீரே.
Verse 30
அழகிய பைம்பொன்னின் கோல்அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்துஎங்கு மார்ப்ப மழகன் றினங்கள் மறித்துத் திரிவான் குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலை யீர்வந்து காணீரே.
Verse 31
சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன திருப்பாத கேசத்தைத் தென்புது வைப்பட்டன் விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும் உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே.
Verse 32
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!
Verse 33
உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்; உடையாய் அழேல்அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!
Verse 34
என்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு, இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!
Verse 35
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார், செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!
Verse 36
எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழுவில் கொடையான் வயிச்சி ரவணன் தொழுதுஉவ னாய்நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!
Verse 37
ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும் சாதிப் பவளமும்சந்தச் சரிவளையும் மாதக்க வென்று வருணன் விடுதந்தான் சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!
Verse 38
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் கோனே! அழேல்அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!
Verse 39
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் நச்சுமுலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ!
Verse 40
மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்குஅஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள் அய்யா அழேல்அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!
Verse 41
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே
Verse 42
தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய் பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான் என்மகன் கோவிந்தன் கூத்தி னை இள மாமதீ நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.
Verse 43
என்சிறுக் குட்டன் எனக்கோ ரின்னமுது எம்பிரான் தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான் அஞ்சனவண்ணனோடு ஆடலாட உறுதியேல் மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா.
Verse 44
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய் வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா.
Verse 45
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்காண் தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கட் பெறாத மலட னல்லையேல் வாகண்டாய்.
Verse 46
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூகின்றான் குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல் புழையில ஆகாதே நின்செவி புகர் மா மதீ.
Verse 47
தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான் உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில் விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.
Verse 48
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள் ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் மேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா
Verse 49
சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள் சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண் நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
Verse 50
தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூகின்றான் ஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண் வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா
Verse 51
மைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே
Verse 52
உய்ய உலகுபடைத் துண்ட மணிவயிறா [TAB]ஊழிதோ றூழிபல ஆலி னிலையதன்மேல் பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே [TAB]பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே செய்யவள் நின்னகலம் சேமமெ னக்கருதிச் [TAB]செல்வுபொ லிமகரக் காது திகழ்ந்திலக ஐயஎ னக்குஒருகால் ஆடுக செங்கீரை [TAB]ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
Verse 53
கோளரி யின்னுருவங் கொண்டுஅவுணனுடலம் [TAB]குருதி குழம்பியெழக் கூருகி ரால்குடைவாய் மீள அவன்மகனை மெய்ம்மை கொளக்கருதி [TAB]மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டுவர காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக் [TAB]கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே ஆள எனக்குஒருகால் ஆடுக செங்கீரை [TAB]ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
Verse 54
நம்முடை நாயகனே நான்மறை யின்பொருளே [TAB]நாபியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால் தம்மனை யானவனே தரணி தலமுழுதும் [TAB]தாரகை யின்னுலகும் தடவி அதன்புறமும் விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ்விடையும் [TAB]விரவிய வேலைதனுள் வென்று வருமவனே அம்ம எனக்குஒருகால் ஆடுக செங்கீரை [TAB]ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
Verse 55
வானவர் தாம்மகிழ வன்சக டமுருள [TAB]வஞ்சமு லைப்பேயின் நஞ்சமது உண்டவனே கானக வல்விளவின் காயுதி ரக்கருதிக் [TAB]கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே தேனுக னும்முரனும் திண்திறல் வெந்நரகன் [TAB]என்பவர் தாம்மடியச் செருவத ரச்செல்லும் ஆனை எனக்குஒருகால் ஆடுக செங்கீரை [TAB]ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
Verse 56
மத்தள வும்தயிரும் வார்குழல் நன்மடவார் [TAB]வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி ஒருங்கு ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை [TAB]ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் முத்தினி ளமுறுவல் முற்ற வருவதன்முன் [TAB]முன்ன முகத்தணியார் மொய்குழல்கள் அலைய அத்த எனக்குஒருகால் ஆடுக செங்கீரை [TAB]ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
Verse 57
காய மலர்நிறவா கருமுகில் போலுருவா [TAB]கானக மாமடுவில் காளிய னுச்சியிலே தூய நடம்பயிலும் சுந்தர என்சிறுவா [TAB]துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே ஆய மறிந்துபொரு வான்எதிர் வந்தமல்லை [TAB]அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய் ஆய எனக்குஒருகால் ஆடுக செங்கீரை [TAB]ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
Verse 58
துப்புடை யயார்கள்தம் சொல்வழு வாதுஒருகால் [TAB]தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய [TAB]நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் [TAB]தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டியஎன் அப்ப எனக்குஒருகால் ஆடுக செங்கீரை [TAB]ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
Verse 59
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி [TAB]உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும் கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் [TAB]கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் [TAB]சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை [TAB]ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே.
Verse 60
பாலொடு நெய்தயிர்ஒண் சாந்தொடு சண்பகமும் [TAB]பங்கயம் நல்லகருப் பூரமும் நாறிவர கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் [TAB]கோமள வெள்ளிமுளைப் போல்சில பல்லிலக நீல நிறத்தழகா ரைம்படை யின்நடுவே [TAB]நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ ஏலு மறைப்பொருளே ஆடுக செங்கீரை [TAB]ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.
Verse 61
செங்கம லக்கழலில் சிற்றிதழ் போல்விரலில் [TAB]சேர்திக ழாழிகளும் கிண்கிணி யும்அரையில் தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின் [TAB]பூவொடு பொன்மணியும் மோதிர மும்கிறியும் மங்கல ஐம்படையும் தோல்வளை யும்குழையும் [TAB]மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை [TAB]ஏழுல கும்முடையாய் ஆடுக ஆடுகவே.
Verse 62
அன்னமும் மீனுருவும் ஆளரி யும்குறளும் [TAB]ஆமையு மானவனே ஆயர்கள் நாயகனே என்அவ லம்களைவாய் ஆடுக செங்கீரை [TAB]ஏழுல கும்முடையாய் ஆடுக வாடுகவென்று அன்ன நடைமடவாள் அசோதை யுகந்தபரிசு [TAB]ஆன புகழ்ப்புதுவைப் பட்ட னுரைத்ததமிழ் இன்னிசை மாலைகள்இப் பத்தும்வல் லார்உலகில் [TAB]எண்திசை யும்புகழ்மிக்கு இன்பம்அது எய்துவரே.
Verse 63
மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல் ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன் னுடைமணி பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு காணிகொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி.
Verse 64
பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி தன்னரை யாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட என்னரை மேல்நின் றிழிந்துஉங்க ளாயர்தம் மன்னரை மேல்கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி.
Verse 65
பன்மணி முத்துஇன் பவளம் பதித்தன்ன என்மணி வண்ணன் இலங்குபொற் றோட்டின்மேல் நின்மணி வாய்முத் திலங்கநின் னம்மைதன் அம்மணி மேல்கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி.
Verse 66
தூநிலா முற்றத்தே போந்து விளையாட வானிலாஅம்புலீசந்திரா வாவென்று நீநிலா நின்புக ழாநின்ற ஆயர்தம் கோநிலா வக்கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி.
Verse 67
புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண் பட்டிக்கன் றேகொட்டாய் சப்பாணி பற்பநா பாகொட்டாய் சப்பாணி.
Verse 68
தாரித்து நூற்றுவர் தந்தைசொல் கொள்ளாது போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்குஅன்று தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி.
Verse 69
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோத கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி.
Verse 70
குரக்கினத் தாலே குரைகடல் தன்னை நெருக்கி அணைகட்டி நீள்நீ ரிலங்கை அரக்கர் அவிய அடுகணை யாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி.
Verse 71
அளந்திட்ட தூணை அவந்தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய் உளந்தொட் டிரணியன் ஒண்மார் வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலை யுண்டானே சப்பாணி.
Verse 72
அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி வடம்சுற்றி வாசுகி வன்கயி றாக்க் கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார்முகில் வண்ணனே சப்பாணி.
Verse 73
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத் தூர்ப்பட்டன் வேட்கையி னால் சொன்ன சப்பாணி ஈரைந்தும் வேட்கையி னால்சொல்லு வார்வினை போமே.
Verse 74
தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்குபொன் மணியொலிப்ப படுமும் மதப்புனல் சோர வாரணம் பையநின்று ஊர்வதுபோல் உடங்கூடிக் கிண்கிணி யாரவா ரிப்ப உடைமணி பறைகறங்க தடந்தா ளிணைகொண்டு சாரங்க பாணி தளர்நடை நடவானோ.
Verse 75
செக்க ரிடைநுனிக் கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன் தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.
Verse 76
மின்னுக் கொடியும் ஓர்வெண் திங்களும் சூழ்பரி வேடமுமாய் பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும் மின்னில் பொலிந்த தோர்கார் முகில்போலக் கழுத்திணில் காறை யொடும் தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ.
Verse 77
கன்னற் குடம்திறந் தாலொத் தூறிக் கணகண சிரித்துவந்து முன்வந்து நின்று முத்தம் தரும்என் முகில்வண்ணன் திருமார்வன் தன்னைப் பெற்றேற்குத் தன்வா யமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ.
Verse 78
முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவதுபோல் பன்னி யுலகம் பரவியோ வாப்புகழ்ப் பலதே வனென்னும் தன்நம்பி யோடப் பின்கூடச் செல்வான் தளர்நடை நடவானோ.
Verse 79
ஒருகா லில்சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த இருகா லும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை படநடந்து பெருகா நின்ற இன்பவெள் ளத்தின்மேல் பின்னையும் பெய்துபெய்து கருகார்க்கடல்வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ.
Verse 80
படர்பங் கயமலர் வாய் நெகிழப் பனிபடு சிறுதுளிபோல் இடங்கொண் டசெவ் வாயூறி யூறி இற்றிற்று வீழநின்று கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல் போல் உடைமணி கணகணென தடந்தா ளினைகொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ.
Verse 81
பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய அக்கு வடமிழிந் தேறித் தாழ அணியல்குல் புடைபெயர மக்க ளுலகினில் பெய்தறி யாத மணிக்குழ வியுருவின் தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ.
Verse 82
வெண்புழுதி மேல்பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின் கருங்கன்றுபோல் தெண்புழுதி யாடித் திரிவிக் கிரமன் சிறுபுகர் படவியர்த்து ஒண்போதலர் கமலச் சிறுக்கா லுரைத்து ஒன்றும் நோவாமே தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ.
Verse 83
திரைநீர்ச் சந்திர மண்ட லம்போல் செங்கண்மால் கேசவன்தன் திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர பெருநீர்த் திரையெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்தபலம் தருநீர் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ.
Verse 84
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார் மாயன் மணிவண் ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே.
Verse 85
பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி தன்னிய லோசை சலஞ்சல னென்றிட மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல் என்னிடைக்கோட்டரா அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ.
Verse 86
செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல் பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய அங்கைக ளாலேவந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ.
Verse 87
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ.
Verse 88
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன தேறி அவளும் திருவுடம் பில்பூச ஊறிய கூனினை உள்ளே யொடுங்கஅன்று ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ.
Verse 89
கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்துஉன்னை நோக்கும் சுழலைப் பெரிதுடைத் துச்சோ தனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ.
Verse 90
போரொக்கப் பண்ணிஇப் பூமிப் பொறைதீர்ப்பான் தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய் காரொக்கும் மேனிக் கரும்பேருங் கண்ணனே ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ.
Verse 91
மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில் தக்கதி தன்றென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ.
Verse 92
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ.
Verse 93
கண்ட கடலும் மலையும் உலகேழும் முண்டத்துக் காற்றா முகில்வண்ணா ஓஒவென்று இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ.
Verse 94
துன்னிய பேரிருள் சூழ்ந்துஉல கைமூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்கஅன்று அன்னம தானானே அச்சோ வச்சோ அருமறை தந்தானே அச்சோ வச்சோ.
Verse 95
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருகவென்று ஆய்ச்சயு ரைத்தன மச்சணி மாடப் புதுவைகோன் பட்டன்சொல் நச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.
Verse 96
வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல் சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்கஎன் குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.
Verse 97
கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில் கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.
Verse 98
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான் கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான்.
Verse 99
நாந்தக மேந்திய நம்பி சரணென்று தாழ்ந்த தனஞ்சயற் காகி தரணியில் வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.
Verse 100
வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ் பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப பண்டு மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.
Verse 101
சத்திர மேந்தித் தனியொரு மாணியாய் உத்தர வேதியில் நின்ற ஒருவனை கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.
Verse 102
பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திருவயி றார விழுங்கிய அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.
Verse 103
மூத்தவை காண முதுமணற் குன்றேறி கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.
Verse 104
கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள் உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.
Verse 105
ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்தநின் மக்களைப் பெற்று மகிழ்வரே.
Verse 106
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் பத்தூர் பெறாதுஅன்று பாரதம் கைசெய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
Verse 107
மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற செங்கண் அலவலைவந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
Verse 108
காயும்நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீயபணத்தில்சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயிங் குழலூதி வித்தகனாய்நின்ற ஆயன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
Verse 109
இருட்டில் பிறந்துபோய் ஏழைவல் லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப் புரட்டிஅந் நாள்எங்கள் பூம்பட்டுக் கொண்ட அரட்டன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
Verse 110
சேப்பூண்ட சாடு சிதறி திருடிநெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
Verse 111
செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு சொப்படத் தோன்றித் தொறுப்பாடி யோம்வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
Verse 112
தத்துக் கொண்டாள்கொலோ தானேபெற் றாள்கொலோ சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம் கொத்தார் கருங்குழல் கோபால கோளரி அத்தன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
Verse 113
கொங்கைவன் கூனிசொற் கொண்டுகு வலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற் கருளிவன் கானடை அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
Verse 114
பதக முதலைவாய்ப் பட்ட களிறு கதறிக்கைகூப்பிஎன் கண்ணாகண் ணாஎன்ன உதவப்புள் ளூர்ந்து அங்குஉறுதுயர் தீர்த்த அதகன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
Verse 115
வல்லா ளிலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனைவிட்டு சித்தன் விரித்த சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல் இவைபத்தும் வல்லார்போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே.
Verse 116
அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே இரவுமுண்ணாது உறங்கிநீபோய் இன்றுமுச்சி கொண்டதாலோ வரவும்காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே.
Verse 117
வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும் இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்நீ பிறந்தபின்னை எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே முத்தனைய முறுவல்செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே.
Verse 118
தந்தம்மக்கள் அழுதுசென்றால் தாய்மாராவார் தரிக்ககில்லார் வந்துநன்மேல் பூசல்செய்ய வாழவல்ல வாசுதேவா உந்தையார்உந் திறத்தரல்லர் உன்னைநானொன் றுரப்பமாட்டேன் நந்தகோப னணிசிறுவா நான்சுரந்த முலையுணாயே.
Verse 119
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச்சகடு கலக்கழிய பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்தபோது நொந்திடுமென்று அஞ்சினேன்காண் அமரர்கோவே ஆயர்கூட்டத் தளவன்றாலோ கஞ்சனைஉன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே.
Verse 120
தீயபுந்திக் கஞ்சன்உன்மேல் சினமுடையன் சோர்வுபார்த்து மாயந்தன்னால் வலைப்படுக் கில்வாழகில்லேன் வாசுதேவா தாயர்வாய்ச்சொல் தருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன் போகவேண்டா ஆயர்பாடிக் கணிவிளக்கே அமர்ந்துவந்துஎன் முலையுணாயே.
Verse 121
மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு இன்னிசைக் கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக்கண்டார் என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள் என்னும்வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலையுணாயே.
Verse 122
பெண்டிர்வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுதுமென்னு மாசையாலே கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்கநோக்கி வண்டுலாம்பூங் குழலினார்உன் வாயமுதம் உண்ணவேண்டி கொண்டுபோவான் வந்துநின்றார் கோவிந்தாநீ முலையுணாயே.
Verse 123
இருமலைபோ லெதிர்ந்தமல்லர் இருவரங்கம் எரிசெய்தாய்உன் திருமலிந்து திகழ்மார்வு தேக்கவந்துஎன் னல்குலேறி ஒருமுலையை வாய்மடுத்து ஒருமுலையை நெருடிக்கொண்டு இருமுலையும் முறைமுறையா ஏங்கிஏங்கி இருந்துணாயே.
Verse 124
அங்கமலப் போதகத்தில் அணிகொள்முத்தம் சிந்தினாற்போல் செங்கமல முகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம் முற்றத்தூடே அங்கமெல்லாம் புழுதியாக அளையவேண்டா அம்மவிம்ம அங்கமரர்க் கமுதளித்த அமரர்கோவே முலையுணாயே.
Verse 125
ஓடவோடக் கிங்கிணிகள் ஒலிக்குமோசைப் பாணியாலே பாடிப்பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன் ஆடியாடி யசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தையாடி ஓடியோடிப் போய்விடாதே உத்தமாநீ முலையுணாயே.
Verse 126
வாரணிந்த கொங்கையாய்ச்சி மாதவாஉண் ணென்றமாற்றம் நீரணிந்த குவளைவாசம் நிகழநாறும் வில்லிபுத்தூர் பாரணிந்த தொல்புகழான் பட்டர்பிரான் பாடல்வல்லார் சீரணிந்த செங்கண்மால்மேல் சென்றசிந்தை பெறுவார்தாமே.
Verse 127
போய்ப்பா டுடையநின் தந்தையும்தாழ்த்தான் [TAB]பொருதிறல் கஞ்சன் கடியன் காப்பாரு மில்லை கடல்வண்ணா [TAB]உன்னைத் தனியேபோய் எங்கும் திரிதி பேய்ப்பால் முலையுண்ட பித்தனே [TAB]கேசவநம்பீ உன்னைக் காதுகுத்த ஆய்ப்பாலர் பெண்டுக ளெல்லாரும் வந்தார் [TAB]அடைக்காய் திருத்திநான் வைத்தேன்.
Verse 128
வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி [TAB]மலர்ப்பாதக் கிங்கிணி யார்ப்ப நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத [TAB]நாராய ணாஇங்கே வாராய் எண்ணற் கரிய பிரானே [TAB]திரியை எரியாமே காதுக் கிடுவன் கண்ணுக்குநன்றும் அழகும் உடைய [TAB]கனகக் கடிப்பும் இவையா.
Verse 129
வையமெல் லாம்பெறும் வார்கடல் வாழும் [TAB]மகரக் குழைகொண்டு வைத்தேன் வெய்யவே காதில் திரியை யிடுவன் [TAB]நீ வேண்டிய தெல்லாம் தருவன் உய்யஇவ் வாயர் குலத்தினில் தோன்றிய [TAB]ஒண்சுடராயர்கொ ழுந்தே மையன்மை செய்துஇள வாய்ச்சிய ருள்ளத்து [TAB]மாதவ னேஇங்கே வாராய்.
Verse 130
வணநன் றுடைய வயிரக் கடிப்பிட்டு [TAB]வார்காது தாழப் பெருக்கி குணநன் றுடையர்இக் கோபால பிள்ளைகள் [TAB]கோவிந்தா நீசொல்லுக் கொள்ளாய் இணைநின் றழகிய இக்கடிப்பு இட்டால் [TAB]இனிய பலாப்பழம் தந்து சுணநன் றணிமுலை யுண்ணத் தருவன்நான் [TAB]சோத்தம் பிரான்இங்கே வாராய்.
Verse 131
சோத்தம் பிரான்என்று இரந்தாலும் கொள்ளாய் [TAB]சுரிகுழ லாரொடு நீபோய் கோத்துக் குரவை பிணைந்துஇங்கு வந்தால் [TAB]குணங்கொண் டிடுவனோ நம்பீ பேர்த்தும் பெரியன அப்பம்த ருவன் [TAB]பிரானே திரியிட வொட்டில் வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் [TAB]விட்டுவே நீஇங்கே வாராய்.
Verse 132
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் [TAB]உன்வாயில் விரும்பி யதனைநான் நோக்கி மண்ணெல் லாம்கண்டுஎன் மனத்துள்ளே யஞ்சி [TAB]மதுசூத னேயென்ற றிந்தேன் புண்ணேது மில்லைஉன் காது மறியும் [TAB]பொறுத்துஇறைப் போதுஇரு நம்பீ கண்ணாஎன் கார்முகி லேகடல் வண்ணா [TAB]காவல னேமுலை யுணாயே.
Verse 133
முலையேதும் வேண்டேனென் றோடி [TAB]நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு மலையை யெடுத்து மகிழ்ந்துகல் மாரி காத்துப் [TAB]பசுநிரை மேய்த்தாய் சிலையொன்று இறுத்தாய் திரிவிக் கிரமா [TAB]திருவாயர் பாடிப் பிரானே தலைநிலாப் போதேஉன் காதைப் பெருக்காதே [TAB]விட்டிட்டேன் குற்றமே யன்றே.
Verse 134
என்குற்ற மேயென்று சொல்லவும் வேண்டாகாண் [TAB]என்னைநான் மண்ணுண்டே னாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் [TAB]அனைவர்க்கும் காட்டிற் றிலையே வன்புற் றரவின் பகைக்கொடி [TAB]வாமன நம்பீ உன்காதுகள் தூரும் துன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே [TAB]திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.
Verse 135
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் [TAB]தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று கையைப் பிடித்துக் கரையுர லோடுஎன்னைக் [TAB]காணவே கட்டிற் றிலையே செய்தன சொல்லிச் சிரித்துஅங்கு இருக்கில் [TAB]சிரிதரா உன்காது தூரும் கையில் திரியை யிடுகிடாய் இந்நின்ற [TAB]காரிகை யார்சிரி யாமே.
Verse 136
காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? [TAB]காதுகள் வீங்கி யெறியில் தாரியா தாகில் தலைநொந் திடுமென்று [TAB]விட்டிட்டேன் குற்றமே யன்றே சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் [TAB]காது பெருக்கித் திரியவும் காண்டி ஏர்விடை செற்றுஇளங் கன்றுஎறிந் திட்ட [TAB]இருடீகே சாஎன்தன் கண்ணே.
Verse 137
கண்ணைக் குளிரக் கலந்துஎங்கும் நோக்கிக் [TAB]கடிகமழ் பூங்குழ லார்கள் எண்ணத்துள் என்றும் இருந்து [TAB]தித்திக்கும் பெருமானே எங்க ளமுதே உண்ணக் கனிகள் தருவன் [TAB]கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன் பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட [TAB]பற்பநா பாஇங்கே வாராய்.
Verse 138
வாவென்று சொல்லிஎன் கையைப் பிடித்து [TAB] வலியவே காதில் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? [TAB] காதுகள் நொந்திடும் கில்லேன் நாவற் பழம்கொண்டு வைத்தேன் [TAB] இவைகாணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச் சாவப்பா லுண்டு சகடிறப் பாய்ந்திட்ட [TAB] தாமோத ராஇங்கே வாராய்.
Verse 139
வார்காது தாழப்பெருக் கியமைத்து [TAB]மகரக் குழையிட வேண்டி சீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல் [TAB]சிந்தையுள் நின்று திகழ பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் [TAB]பன்னிரு நாமத்தாற் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண் டும்வல்லார் [TAB]அச்சுத னுக்குஅடி யாரே.
Verse 140
வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன் எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்குஎத்தனை போதும் இருந்தேன் நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்
Verse 141
கன்றுக ளோடச் செவியில் கட்டெறும் புபிடித் திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் நின்ற மராமரம் சாய்த்தாய் நீபிறந் ததிரு வோணம் இன்று நீநீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்
Verse 142
பேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நல்லாதுஎன் னெஞ்சம் ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான்முலை தந்தேன் காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன் வாய்த்த புகழ்மணி வண்ணா மஞ்சன மாடநீ வாராய்.
Verse 143
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும் அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.
Verse 144
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.
Verse 145
எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.
Verse 146
கறந்தநற் பாலும் தயிரும் கடைந்துஉறி மேல்வைத்த வெண்ணெய் பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே சிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.
Verse 147
கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும் நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள் நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.
Verse 148
பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும் மாணிக்க மேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.
Verse 149
கார்மலி மேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்து வார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை பார்மலி தொல்புது வைக்கோன் பட்டர் பிரான்சொன்ன பாடல் சீர்மல செந்தமிழ் வல்லார் தீவினை யாது மிலரே.
Verse 150
பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை முன்னை யமரர் முதல்தனி வித்தினை என்னையும் எங்கள் குடிமுழுது ஆட்கொண்ட மன்னனை வந்துகுழல் வாராய்அக் காக்காய் [TAB]மாதவன் தன்குழல் வாராய்அக் காக்காய்
Verse 151
பேயின் முலையுண்ட பிள்ளை இவன்முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்வண்ணன் கண்ணன் கருங்குழல் தூய்தாக வந்துகுழல் வாராய்அக் காக்காய் [TAB]தமணி வண்ணன்குழல் வாராய்அக் காக்காய்.
Verse 152
திண்ணக் கலத்தில் திரையுறி மேல்வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம் கண்ணனை வந்துகுழல் வாராய்அக் காக்காய் [TAB]கார்முகில் வண்ணன்குழல் வாராய்அக் காக்காய்.
Verse 153
பள்ளத்தில் மேயும் பறவை யுருக்கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான்கண்டு புள்ளிது வென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட பிள்ளையை வந்துகுழல் வாராய்அக் காக்காய் [TAB]பேய்முலை யுண்டான்குழல் வாராய்அக் காக்காய்.
Verse 154
கற்றினம் மேய்த்துக் கனிக்குஒரு கன்றினை பற்றி யெறிந்த பரமன் திருமுட உற்றனபேசிநீ ஓடித் திரியாதே அற்றைக்கும் வந்துகுழல் வாராய் அக் காக்காய் [TAB]ஆழியான் தன்குழல் வாராய்அக் காக்காய்.
Verse 155
கிழக்கில் குடிமன்னர் கேடிலா தாரை அழிப்பான் நனைந்திட்டுஅவ் வாழி யதனால் விழிக்கு மளவிலே வேரறுத் தானை குழற்குஅணி யாகக்குழல் வாராய்அக் காக்காய் [TAB]கோவிந்தன் தன்குழல் வாராய்அக் காக்காய்.
Verse 156
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச்சோறும் உண்டற்கு வேண்டிநீ ஓடித் திரியாதே அண்டத்து அமரர் பெருமான் அழகமர் வண்டொத் திருண்டகுழல் வாராய்அக் காக்காய் [TAB]மாயவன்தன் குழல் வாராய்அக் காக்காய்.
Verse 157
உந்தி யெழுந்த உருவம லர்தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் கொந்தக்குழலைக் குறந்து புளியட்டி தந்தத்தின் சீப்பால் குழல்வாராய்அக் காக்காய் [TAB]தாமோ தரன்தன்குழல் வாராய்அக் காக்காய்.
Verse 158
மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த முன்இவ் வுலகினை முற்றும் அளந்தவன் பொன்னின்முடியினைப் பூவணை மேல்வைத்து பின்னேயிருந் துகுழல் வாராய்அக் காக்காய் [TAB]பேரா யிரத்தான்குழல் வாராய்அக் காக்காய்.
Verse 159
கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன் வண்டார் குழல்வார வாவென்ற ஆய்ச்சி சொல் விண்தோய் மதிள்வில்லி புத்தூர்க்கோன் பட்டன்சொல் கொண்டாடிப் பாடக் குறுகா வினைதாமே
Verse 160
வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற்பூண்டு பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு காலிப்பின் போவாற்குஓர் கோல்கொண்டுவா [TAB]கடல்நற வண்ணற்குஓர் கோல்கொண்டுவா.
Verse 161
கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என்மகன் சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்கநில் அங்க முடையதோர் கோல்கொண்டுவா [TAB]அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா
Verse 162
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்வாய் கீண்டான் நெறித்த குழல்களை நீங்கமுன் னோடி சிறுக்கன்று மேய்ப்பாற்குஓர் கோல்கொண்டுவா [TAB]தேவ பிரானுக்குஓர் கோல்கொண்டுவா
Verse 163
ஒன்றே யுரைப்பான் ஒருசொல்லே சொல்லுவன் துன்று முடியான் துரியோ தனன்பக்கல் சென்றுஅங்குப் பாரதம் கையெறிந் தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல்கொண்டுவா [TAB]கடல்நிற வண்ணர்க்குஓர் கோல்கொண்டுவா.
Verse 164
சீரொன்று தூதாய்த் துரியோ தனன்பக்கல் ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் பாரொன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத் தேரொன்றை யூர்ந்தாற்குஓர் கோல்கொண்டுவா [TAB]தேவ பிரானுக்குஓர் கோல்கொண்டுவா.
Verse 165
ஆலத் திலையான் அரவி னணைமேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா [TAB]குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா
Verse 166
பொன்திகழ் சித்திரகூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒருகண்ணும் கொண்டஅக் கற்றைக் குழலன் கடியன் விரைந்துஉன்னை மற்றைக்கண் கொள்ளாமே கோல்கொண்டுவா [TAB] மணிவண்ண நம்பிக்குஓர் கோல்கொண்டுவா.
Verse 167
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணிமுடி பத்தும் உடன்வீழ தன்னிகரொன் றில்லாச்சிலைகால் வளைத்திட்ட மின்னு முடியற்குஓர் கோல்கொண்டுவா [TAB]வேலை யடைத்தாற்குஓர் கோல்கொண்டுவா.
Verse 168
தென்னிலங்கை மன்னன்சிரம்தோள் துணி செய்து மின்னிலங் குபூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு நாமத்த ளவும் அரசென்ற மின்னிலங் காரற்குஓர் கோல்கொண்டுவா [TAB]வேங்கட வாணர்க்குஓர் கோல்கொண்டுவா.
Verse 169
அக்காக்காய் நிம்பிக்குக் கோல்கொண்டு வாவென்று மிக்கா ளுரைத்தசொல் வில்லிபுத் தூர்ப்பட்டன் ஒக்க வுரைத்த தமிழ்பத்தும் வல்லவர் மக்களைப் பெற்று மகிழ்வர்இவ் வையத்தே.
Verse 170
ஆனிரை மேய்க்கநீ போதி அருமருந் தாவ தறியாய் கானக மெல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப தேனி லினிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்.
Verse 171
கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள் உருவுடை யாய்உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய் திருவுடையாள் மணவாளா திருவரங் கத்தே கிடந்தாய் மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்.
Verse 172
மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய் பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய்.
Verse 173
தெருவின்கண் நின்றுஇள வாய்ச்சி மார்களைத் தீமைசெய்யாதே மருவும் தமனக மும்சீர் மாலை மணம் கமழ்கின்ற புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற்கன்று போலே உருவ மழகிய நிம்பீ உகந்திவை சூட்டநீ வாராய்.
Verse 174
புள்ளினை வாய்பிளந் திட்டாய் பொருகரி யின்கொம் பொசித்தாய் கள்ள வரக்கியை மூக்கொடு காவல னைத்தலை கொண்டாய் அள்ளிநீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் தெள்ளிய நீரிலெ ழுந்த செங்கழு நீர்சூட்ட வாராய்.
Verse 175
எருதுக ளோடு பொருதி ஏதும் உலோபாய்கான் நம்பி கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் தெருவின்கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்க ளோடு பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூச்சூட்ட வாராய்.
Verse 176
குடங்க ளெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎம் கோவே மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்லஎன் மைந்தா இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிள வாகமுன் கீண்டாய் குடந்தைக் கிடந்தஎம்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.
Verse 177
சீமா லிகனவ னோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனைநீ யெண்ணிச் சக்கரத் தால்தலை கொண்டாய் ஆமா றறியும் பிரானே அணியரங் கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்.
Verse 178
அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங்கி ருந்தாய் தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் தூமல ராள்மண வாளா உண்டிட்டு உலகினை யேழும் ஓரா லிலையில் துயில்கொண்டாய் கண்டுநான் உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்.
Verse 179
செண்பக மல்லிகை யோடு செங்கழு நீர்இரு வாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்தஇம் மாலை பண்பகர் வில்லிபுத் தூர்க்கோன் பட்டர் பிரான்சொன்ன பத்தே.
Verse 180
இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம் மந்திர மாமலர் கொண்டு மறைந்துஉவ ராய்வந்து நின்றார் சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம் போதுஇது வாகும் அழகனே காப்பிட வாராய்.
Verse 181
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின் றபசு வெல்லாம் நின்றொழிந் தேன்உன்னைக் கூவி நேசமே லொன்று மிலாதாய் மன்றில்நல் லேல்அந்திப் போது மதிள்திரு வெள்ளறை நின்றாய் நின்றுகண் டாய்என்தன் சொல்லு நான்உன்னைக் காப்பிட வாராய்.
Verse 182
செப்போது மென்முலை யார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு அப்போது நானுரப் பப்போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய் முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய் இப்போது நான்ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்.
Verse 183
கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை யென்றென்று எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படு கின்றார் கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோ டேதீமை செய்வாய் வண்ணமே வேலைய தொப்பாய் வள்ளலே காப்பிட வாராய்.
Verse 184
பல்லா யிரவர்இவ் வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம்உன் மேலன்றிப் போகாது எம்பிரான் நீஇங்கே வாராய் நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன்மேனி சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்.
Verse 185
கஞ்சங் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பதுஓர் வார்த்தையும் உண்டு மஞ்சு தவழ்மணி மாட மதிள்திரு வெள்ளறை நின்றாய் அஞ்சுவன் நீஅங்குநிற்க அழகனே காப்பிட வாராய்.
Verse 186
கள்ளச் சகடும் மருதும் கலக்கழி யஉதை செய்த பிள்ளை யரசேநீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய் பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்.
Verse 187
இன்ப மதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே செம்பொன்மதிள்வெள் ளறையாய் செல்வத்தி னால்வளர் பிள்ளாய் கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்.
Verse 188
இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறை யோர்வந்து நின்றார் தருக்கேல்நம்பி சந்தி நின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள் திருக்காப்பு நான்உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய் உருக்காட்டும் அந்தி விளக்குஇன் றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்.
Verse 189
போதமர் செல்வக் கொழுந்து புணர்திரு வெள்ளறை யானை மாதர்க் குயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம் வேதப் பயன்கொள்ள வல்ல விட்டுசித் தன்சொன்ன மாலை பாதப் பயன்கொள்ள வல்ல பத்தருள் ளார்வினை போமே.
Verse 190
வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை [TAB]வெற்பிடை யிட்டுஅத னோசை கேட்கும் கண்ண பிரான்கற்ற கல்வி தன்னைக் [TAB]காக்ககில் லோம்உன் மகனைக் காவாய் புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை [TAB]புரைபுரை யால்இவை செய்ய வல்ல அண்ணற்கண் ணானோர் மகனைப் பெற்ற [TAB]அசோதை நங்காய்உன் மகனைக் கூவாய்.
Verse 191
வருக வருக வருக இங்கே [TAB]வாமன நம்பீ வருக இங்கே கரிய குழல்செய்ய வாய்மு கத்துக் [TAB]காகுத்த நம்பீ வருக இங்கே அரிய னிவன்எனக்கு இன்று நங்காய் [TAB]அஞ்சன வண்ணா அசல கத்தார் பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் [TAB]பாவியே னுக்குஇங்கே போத ராயே.
Verse 192
திருவுடைப் பிள்ளை தான்தீய வாறு [TAB]தேக்கமொன் றுமிலன் தேசு டையன் உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் [TAB]உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான் அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் [TAB]வழக்கோ அசோதாய் வருகவென்று உன்மகன் தன்னைக் கூவாய் [TAB]வாழவொட்டான் மதுசூ தனனே.
Verse 193
கொண்டல்வண் ணாஇங்கே போத ராயே [TAB]கோயிற்பிள் ளாய்இங்கே போத ராயே தெண்திரை சூழ்திருப் பேர்க்கிடந்த [TAB]திருநார ணாஇங்கே போத ராயே உண்டுவந் தேன்அம்ம னென்று சொல்லி [TAB]ஓடி அகம்புக ஆய்ச்சி தானும் கண்டெதி ரேசென் றெடுத்துக் கொள்ளக் [TAB]கண்ணபி ரான்கற்ற கல்வி தானே.
Verse 194
பாலைக் கறந்துஅடுப் பேற வைத்துப் [TAB]பல்வளை யாள்என் மக ளிருப்ப மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று [TAB]இறைப் பொழுதுஅங்கே பேசி நின்றேன் சாளக் கிராம முடைய நம்பி [TAB]சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் ஆலைக்கரும்பின் மொழி யனைய [TAB]அசோதைநங் காய்உன் மகனைக் கூவாய்.
Verse 195
போதர்கண் டாய்இங்கே போதர் கண்டாய் [TAB]போதரே னென்னாதே போதர் கண்டாய் ஏதேனும் சொல்லி அசல கத்தார் [TAB]ஏதேனும் பேசநான் கேட்க மட்டேன் கோது கலமுடைக் குட்ட னேயா [TAB]குன்றெடுத் தாய்குட மாடுகூத்தா வேதப் பொருளே என்வேங்கடவா [TAB]வித்தக னேஇங்கே போத ராயே.
Verse 196
செந்நெல் அரிசி சிறு பருப்புச் [TAB]செய்தஅக் காரம் நறுநெய் பாலால் பன்னிரண் டுதிரு வோணம் அட்டேன் [TAB]பண்டும் இப்பிள் ளைபரி சறிவன் இன்ன முகப்பன்நா னென்று சொல்லி [TAB]எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான் உன்மகன் தன்னை யசோதை நங்காய் [TAB]கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.
Verse 197
கேசவ னேஇங்கே போத ராயே [TAB] கில்லேனென் னாதுஇங்கே போத ராயே நேச மிலாதா ரகத்தி ருந்து [TAB] நீவிளை யாடாதே போத ராயே தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் [TAB] தொண்டரும் நின்ற விடத்தில் நின்று தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் [TAB] தாமோத ராஇங்கே போத ராயே.
Verse 198
கன்ன லிலட்டுவத் தோடு சீடை [TAB]காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு என்னக மென்றுநான் வைத்துப் போந்தேன் [TAB]இவன்புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப் [TAB]பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான் உன்மகன் தன்னை யசோதை நங்காய் [TAB]கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.
Verse 199
சொல்லி லரசிப் படுதி நங்காய் [TAB]சுழலு டையன்உன் பிள்ளை தானே இல்லம் புகுந்துஎன் மகளைக் கூவிக் [TAB]கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற [TAB]அங்கொருத் திக்குஅவ் வளைகொ டுத்து நல்லன நாவற் பழங்கள் கொண்டு [TAB]நானல் லேனென்று சிரிக்கின்றானே.
Verse 200
வண்டுகளித் திரைக்கும் பொழில்சூழ் [TAB]வருபுனல் காவிரித் தென்ன ரங்கன் பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் [TAB]பட்டர் பிரான்விட்டு சித்தன் பாடல் கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் [TAB]கோவிந்தன் தன்அடி யார்க ளாகி எண்திசைக் கும்விளக் காகி நிற்பார் [TAB]இணையடி என்தலை மேல னவே.
Verse 201
ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை சேற்றா லெறிந்து வளைதுகில் கைக்கொண்டு காற்றின் கடியனாய் ஓடி அகம்புக்கு மாற்றமும் தாரானால் இன்று முற்றும் [TAB]வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்.
Verse 202
குண்டலம் தாழக் குழல்தாழ நாண்தாழ எண்திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த வண்டமர் பூங்குழ லார்துகில் கைக்கொண்டு விண்தோய் மரத்தானால் இன்று முற்றும் [TAB]வேண்டவும் தாரானால் இன்று முற்றும்.
Verse 203
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் [TAB]உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.
Verse 204
தேனுக னாவி செகுத்து பனங்கனி தானெறிந் திட்ட தடம்பெருந் தோளினால் வானவர் கோன்விட வந்த மழைதடுத்து ஆனிரை காத்தானால் இன்று முற்றும் [TAB] அவையுய்யக் கொண்டானால் இன்று முற்றும்.
Verse 205
ஆய்ச்சியர் சேரி அளைதயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்த்தடந் தோளினார் வெண்ணெய்கொள் மாட்டாது அங்கு ஆப்புண் டிருந்தானால் இன்று முற்றும் [TAB]அடியுண் டழுதானால் இன்று முற்றும்.
Verse 206
தள்ளித் தளிர்நடை யிட்டுஇளம் பிள்ளையாய் உள்ளத்தி னுள்ளே அவளை யுறநோக்கி கள்ளத்தி னால்வந்த பேய்ச்சி முலையுயிர் துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் [TAB]துவக்கற வுண்டானால் இன்று முற்றும்.
Verse 207
மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச்சென்று மூவடி தாவென்று இரந்தஇம் மண்ணினை ஓரடி யிட்டுஇரண் டாமடி தன்னிலே தாவடி யிட்டானால் இன்று முற்றும் [TAB]தரணி யளந்தானால் இன்று முற்றும்.
Verse 208
தாழைதண் ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய் வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண் வேழம் துயர்கெட விண்ணோர் பெருமானாய் ஆழிபணி கொண்டானால் இன்று முற்றும் [TAB]அதற்குஅருள் செய்தானால் இன்று முற்றும்.
Verse 209
வானத் தெழுந்த மழைமுகில் போல் எங்கும்கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை தானத்தே வைத்தானால் இன்று முற்றும் [TAB]தரணி யிடந்தானால் இன்று முற்றும்.
Verse 210
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு மங்கைநல் லார்கள் தாம்வந்து முறைப்பட்ட அங்கவர் சொல்லைப் புதுவைப்கோன் பட்டன்சொல் இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே.
Verse 211
தன்னே ராயிரம் பிள்ளை களோடு தளர்நடையிட்டு வருவான் பொன்னேய் நெய்யொடு பாலமு துண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள்கொங்கை துஞ்சவாய் வைத்த பிரானே அன்னே உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
Verse 212
பொன்போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால் வன்பா ரச்சக டம்இறச் சாடி வடக்கி லகம்புக் கிருந்து மின்போல் நுண்ணிடை யால்ஒரு கன்னியை வேற்றுரு வம்செய்து வைத்த அன்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
Verse 213
கும்மா யத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய் இம்மா யம்வல்ல பிள்ளைநம் பீஉன்னை என்மக னேயென்பர் நின்றார் அம்மா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
Verse 214
மையார் கண்டமட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்துஅவர் பின்போய் கொய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று குற்றம் பலபல செய்தாய் பொய்யா உன்னைப் புறம்பல பேசுவ புத்தகத் துக்குள கேட்டேன் ஐயா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
Verse 215
முப்போ தும்கடைந் தீண்டிய வெண்ணெயி னோடு தயிரும் விழுங்கி கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி மெய்ப்பா லுண்டழு பிள்ளைகள் போலந விம்மிவிம் மியழு கின்ற அப்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
Verse 216
கரும்பார் நீள்வயல் காய்கதிர்ச் செந்நெலைக் கற்றா நிறைமண்டித் தின்ன விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே சுரும்பார் மென்குழல் கன்னி யொருத்திக்குச் சூழ்வலை வைத்துத் திரியும் அரம்பா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
Verse 217
மருட்டார் மென்குழல் கொண்டு பொழில்புக்கு வாய்வைத்துஅவ் வாயர்தம் பாடி சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்துஉன்னைச் சுற்றும் தொழநின்ற சோதி பொருட்டா யமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்றகுற் றமல்லால் மற்றிங்கு அரட்டா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
Verse 218
வாளா வாகிலும் காணகில் லார்பிறர் மக்களை மையன்மை செய்து தோளா லிட்டுஅவ ரோடு திளைத்துநீ சொல்லப் படாதன செய்தாய் கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன் காளாய் உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
Verse 219
தாய்மார் மோர்விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிறைப்பின்பு போவர் நீஆய்ப் பாடிஇளங் கன்னி மார்களை நேர்பட வேகொண்டு போதி காய்வார்க்கு என்றும் உகப்பன வேசெய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
Verse 220
தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம்கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்துஇரா நாழிகை மூவேழு சென்றபின் வந்தாய் ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான்ஒன்றும் மாட்டேன் அத்தா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
Verse 221
கரார் மேனி நிறத்தெம்பி ரானைக் கடிகமழ் பூங்குழ லாய்ச்சி ஆரா இன்னமு துண்ணத் தருவன்நான் அம்மம்தா ரேனென்ற மாற்றம் பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பட்டர்பி ரான்சொன்ன பாடல் ஏரா ரின்னிசை மாலை வல்லார் இருடீகே சனடி யாரே.
Verse 222
அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின்பின் என்செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
Verse 223
பற்று மஞ்சள்பூசிப் பாவை மாரொடு பாடியில் சிற்றில் சிதைத்துஎங்கும் தீமை செய்து திரியாமே கற்றுத் தூளி யுடைவேடர் கானிடைக் கன்றின்பின் எற்றுக்குஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
Verse 224
நன்மணி மேகலை நங்கை மாரொடு நாள்தொறும் பொன்மணி மேனி புழுதி யாடித் திரியாமே கன்மணி நின்றதிர் கா னதரிடைக் கன்றின்பின் என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே.
Verse 225
வண்ணக் கருங்குழல் மாதர் வந்துஅலர் தூற்றிட பண்ணிப் பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே கண்ணுக் கினியானைக்கா னதரிடைக் கன்றின்பின் எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே.
Verse 226
அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே எவ்வம் சிலையுடை வேடர் கானிடைக் கன்றின்பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.
Verse 227
மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய் படிறு பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே கடிறு பலதிரி கா னதரிடைக் கன்றின்பின் இடறஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
Verse 228
வள்ளி நுடங்கிடை மாதர் வந்துஅலர் தூற்றிட துள்ளி விளையாடித் தோழ ரோடு திரியாமே கள்ளி யுணங்கு வெங்கா னதரிடைக் கன்றின்பின் புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.
Verse 229
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டஅப் பாங்கினால் என்இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்துயான் பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின்பின் என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே.
Verse 230
குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனைநான் உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுடை கடியவெங் கானிடைக் காலடி நோவக் கன்றின்பின் கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
Verse 231
என்றும் எனக்குஇனி யானை என்மணி வண்ணனை கன்றின் பின்போக்கி னேனென்று அசோதை கழறிய பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட் டன்சொல் இன்தமிழ் மாலைகள் வல்ல வர்க்குஇட ரில்லையே.
Verse 232
சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேல்தோன் றிப்பூ கோலப் பணைக்கச் சும்கூ றையுடையும் குளிர்முத் தின்கோ டாலமும் காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர் ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோமற் றாரு மில்லை.
Verse 233
கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்ன ரங்கம் மன்னிய சீர்மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வு கந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்ப டுத்தேன் என்னின் மனம்வலி யாள்ஒரு பெண்இல்லை என்குட்ட னேமுத் தம்தா.
Verse 234
காடுக ளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோ டல்பூச் சூடிவ ருகின்ற தாமோ தராகற்றுத் தூளிகாண் உன்னு டம்பு பேடை மயிற்சாயல் பின்னை மணாளா நீராட் டமைத்து வைத்தேன் ஆடி அமுதுசெய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்.
Verse 235
கடியார் பொழிலணி வேங்கட வாகரும் போரே றேநீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடியவெங் கானிடைக் கன்றின்பின் போன சிறுக்குட் டச்செங் கமல அடியும் வெதும்பிஉன் கண்கள் சிவந்தாய் அசைந்திட் டாய்நீ எம்பிரான்.
Verse 236
பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன் னியத்தை வாய்வைத்த போரே றேஎன் சிற்றாயர் சிங்கமே சீதைம ணாளா சிறுக்குட்டச் செங்கண் மாலே சிற்றாடை யும்சிறுப் பத்திர மும்இவை கட்டிலின் மேல்வைத் துப்போய் கற்றாய ரோடுநீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்.
Verse 237
அஞ்சுட ராழிஉன் கையகத் தேந்தும் அழகாநீ பொய்கை புக்கு நஞ்சுமிழ் நாகத்தி னோடு பிணங்கவும் நான்உயிர் வாழ்ந்தி ருந்தேன் என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோ ரச்ச மில்லை கஞ்சன் மனத்துக்கு உகப்பன வேசெய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்.
Verse 238
பன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற்கடல் வண்ணா உன்மேல் கன்றி னுருவாகி மேய்புலத் தேவந்த கள்ள அசுரன் தன்னை சென்று பிடித்துச் சிறுக்கைக ளாலே விளங்கா யெறிந்தாய் போலும் என்றும்என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனமா வார்களே.
Verse 239
கேட்டறி யாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்தி ரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும் ஊட்ட முதலிலேன் உன்தன் னைக்கொண்டு ஒருபோ தும்எனக் கரிது வாட்டமி லாப்புகழ் வாசுதே வாஉன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்.
Verse 240
திண்ணார் வெண்சங் குடையாய் திருநாள் திருவோண மின்றேழு நாள்முன் பண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப் பல்லாண்டு கூறு வித்தேன் கண்ணாலம் செய்யக் கறியும் கலத்த ரிசியும் ஆக்கி வைத்தேன் கண்ணாநீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலம்செய் திங்கேயிரு.
Verse 241
புற்றர வல்குல் அசோதைநல் லாய்ச்சி தன்புத் திரன்கோ விந்தனை கற்றினம் மேய்த்து வரக்கண் டுகந்துஅவள் கற்பித்த மாற்ற மெல்லாம் செற்ற மிலாதவர் வாழ்தரு தென்புது வைவிட்டு சித்தன் சொல் கற்றிவை பாடவல் லார்கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே.
Verse 242
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் [TAB] தண்ணுமை எக்கம்மத் தளிதாழ் பீலி குழல்களும் கீதமு மாகி எங்கும் [TAB] கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி [TAB] மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழைவனர் நிற்பன ராகி எங்கும் [TAB] உள்ளம் விட்டுஊண் மறந்தொழிந் தனரே.
Verse 243
வல்லிநுண் இதழன்ன ஆடை கொண்டு [TAB]வசையறத் திருவரை விரித் துடுத்து பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்திப் [TAB]பணைக்கச் சுந்திப் பலதழை நடுவே முல்லை நல்நறு மலர்வேங் கைமலர் [TAB]அணிந்து பல்லா யர்குழாம் நடுவே எல்லியம் போதாகப் பிள்ளை வரும் [TAB]எதிர் நின்று அங்கினவளை இழவேன் மினே.
Verse 244
சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும் [TAB]மேலாடையும் தோழன் மார்கொண் டோட ஒருகையால் ஒருவன்தன் தோளை யூன்ற [TAB]ஆநிரை யினம்மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் [TAB]மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் அருகேநின் றாள்என்பெண் நோக்கிக் கண்டாள் [TAB]அதுகண்டுஇவ் வூர்ஒன்று புணர்க் கின்றதே.
Verse 245
குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் [TAB] கோவல னாய்க்குழ லூதி யூதி கன்றுகள் மேய்த்துத் தன்தோ ழரோட [TAB] கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனையொப் பாரை நங்காய் [TAB] கண்டறி யேன்ஏடி வந்து காணாய் ஒன்றும்நில் லாவளை கழன்று [TAB] துக லேந்திள முலையும்என் வசமல் லவே.
Verse 246
சுற்றி நின்றுஆ யர்தழை களிடச் [TAB] சுருள்பங்கி நேத்திரத் தால்அ ணிந்து பற்றி நின்றுஆ யர்கடைத் தலையே [TAB] பாடவும் ஆடக்கண் டேன்அன் றிப்பின் மற்றொரு வர்க்குஎன்னைப் பேச லொட்டேன் [TAB] மாலிருஞ் சோலைஎம் மாயற் கல்லால் கொற்றவ னுக்குஇவ ளாமென் றெண்ணிக் [TAB] கொடுமின் கள்கொடீ ராகில்கோ ழம்பமே.
Verse 247
சிந்துர மிலங்கத் தன்திரு நெற்றிமேல் [TAB]திருத்திய கோறம் பும்திருக் குழலும் அந்தர முழவத் தண்தழைக் காவின்கீழ் [TAB]வருமாய ரோடுஉடன் வளைகோல் வீச அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை [TAB]அறிந்தறிந்து இவ்வீதி போது மாகில் பந்துகொண் டானென்று வளைத்து வைத்துப் [TAB]பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ.
Verse 248
சாலப்பல் நிரைப்பின் னேதழைக் காவின் கீழ் [TAB] தன் திருமேனி நின்றொளி திகழ நீல நல்நறுங் குஞ்சி நேத்திரத் தால ணிந்து [TAB] பல் லாயர்குழாம் நடுவே கோலச் செந்தா மரைக்கண் மிளிரக் [TAB] குழலூதி யிசைபா டிக்குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை [TAB] அழகு கண்டுஎன் மகளயர்க் கின்றதே.
Verse 249
சிந்துரப் பொடிக்கொண்டு சென்னி யப்பித் [TAB] திருநாம மிட்டங்கோ ரிலையந் தன்னால் அந்தர மின்றித் தன்னெறி பங்கியை [TAB] அழகிய நேத்திரத் தால ணிந்து இந்திரன் போல்வரு மாயப் பிள்ளை [TAB] எதிர்நின்றங் கினவளை இழவே லென்ன சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்த [TAB] துகிலொடுசரி வளைகழல் கின்றதே.
Verse 250
வலங்காதின் மேல்தோன்றிப் பூவ ணிந்து [TAB] மல்லிகை வனமாலை மெளவல் மாலை சிலிங்காரத் தால்குழல் தாழ விட்டுத் [TAB] தீங்குழல் வாய்மடுத் தூதி யூதி அலங்காரத் தால்வரு மாயப் பிள்ளை [TAB] அழகுகண்டு என்மகள் ஆசைப் பட்டு விலங்கிநில் லாதுஎதிர் நின்று கண்டீர் [TAB] வெள்வளை கழன்று மெய்ம்மெலி கின்றதே.
Verse 251
விண்ணின் மீதுஅம ரர்கள்விரும் பித்தொழ மிறைத்துஆயர் பாடியில் வீதியூடே கண்ணங் காலிப்பின் னேஎழுந் தருளக் கண்டு [TAB]இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம் வண்டமர் பொழில்புது வையர்கோன் [TAB]விட்டு சித்தன் சொன்ன மாலைபத்தும் பண்ணின்பம் வரப்பாடும் பத்த ருள்ளார் [TAB]பரமான வைகுந்தம் நண்ணுவரே.
Verse 252
அட்டுக் குவிசோற் றுப்பருப் பதமும் [TAB]தயிர்வா வியும்நெய் யளறும் அடங்கப் பொட்டத் துற்றுமா ரிப்பகை புணர்த்த [TAB]பொருமா கடல்வண் ணன்பொறுத் தமலை வட்டத் தடங்கண் மடமான் கன்றினை [TAB]வலைவாய்ப் பற்றிக் கொண்டுகுற மகளிர் கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் [TAB]கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
Verse 253
வழுவொன் றுமிலாச் செய்கைவா னவர்கோன் [TAB]வலிப்பட் டுமுனிந் துவிடுக் கப்பட்டு மழைவந்து எழுநாள் பெய்துமாத் தடுப்ப [TAB]மதுசூ தன்எடுத் துமறித் தமலை இழவு தரியாத தோரீற் றுப்பிடி [TAB]இளஞ்சீ யம்தொடர்ந் துமுடு குதலும் குழவி யிடைக்கா லிட்டெதிர்ந் துபொரும் [TAB]கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
Verse 254
அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும் [TAB]ஆனா யரும்ஆ நிரையும் அலறி எம்மைச் சரணேன் றுகொள்ளென் றிரப்ப [TAB]இலங்கா ழிக்கையெந் தைஎடுத் தமலை தம்மைச் சரணென் றதம்பா வையரைப் [TAB]புனமேய் கின்றமா னினம்காண் மினென்று கொம்மைப் புயக்குன் றர்சிலை குனிக்கும் [TAB]கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
Verse 255
கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக் [TAB]கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல் அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு [TAB]அமரர் பெருமான் கொண்டுநின் றமலை கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக் [TAB]கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும் குடவாய்ப் படநின் றுமழை பொழியும் [TAB]கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
Verse 256
வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் [TAB] அறையோ வந்துவாங் குமினென் பவன்போல் ஏனத் துருவா கியஈ சன்எந்தை [TAB] இடவ னெழவாங் கியெடுத் தமலை கானக் களியா னைதன்கொம் பிழந்து [TAB] கதுவாய் மதம்சோ ரத்தன்கை யெடுத்து கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும் [TAB] கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
Verse 257
செப்பா டுடைய திருமா லவன்தன் [TAB] செந்தா மரைக்கை விரலைந் தினையும் கப்பா கமடுத் துமணி நெடுந்தோள் [TAB] காம்பா கக்கொடுத் துக்கவித் தமலை எப்பா டும்பரந் திழிதெள் ளருவி [TAB] இலங்கு மணிமுத் துவடம் பிறழ குப்பா யமென நின்றுகாட் சிதரும் [TAB] கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
Verse 258
படங்கள் பலவு முடைப்பாம் பரையன் [TAB]படர்பூமி யைத்தாங் கிக்கிடப் பவன்போல் தடங்கை விரலைந் தும்மல ரவைத்துத் [TAB]தாமோ தரன்தாங் குதட வரைதான் அடங்கச் சென்றுஇலங் கையையீ டழித்த [TAB]அனுமன் புகழ்பா டித்தம்குட் டன்களை குடங்கைக் கொண்டுமந் திகள்கண் வளர்த்தும் [TAB]கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
Verse 259
சலமா முகில்பல் கணப்போர்க் களத்துச் [TAB]சரமா ரிபொழிந் துஎங்கும்பூ சலிட்டு நலிவா னுறக்கே டகம்கோப் பவன்போல் [TAB]நாரா யணன்முன் முகம்காத் தமலை இலைவேய் குரம்பைத் தவமா முனிவர் [TAB]இருந்தார் நடுவே சென்றுஅணார் சொறிய கொலைவாய்ச் சினவேங் கைகள்நின் றுறங்கும் [TAB]கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
Verse 260
வன்பேய் முலையுண் டதோர்வா யுடையன் [TAB]வன்தூ ணெனநின் றதோர்வன் பரத்தை தன்பே ரிட்டுக்கொண்டு தரணி தன்னில் [TAB]தாமோ தரன்தாங் குதட வரைதான் முன்பே வழிகாட் டமுசுக் கணங்கள் [TAB]முதுகில் பெய்துதம் முடைக்குட் டன்களை கொம்பேற் றியிருந் துகுதி பயிற்றும் [TAB]கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
Verse 261
கொடியே றுசெந்தா மரைக்கை விரல்கள் [TAB]கோல மும்அழிந் திலவா டிற்றில வடிவே றுதிரு வுகிர்நொந் துமில [TAB]மணிவண் ணன்மலை யுமோர்சம் பிரதம் முடியே றியமா முகிற்பல் கணங்கள் [TAB]முன்னெற் றிநரைத் தனபோ லஎங்கும் குடியே றியிருந் துமழை பொழியும் [TAB]கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
Verse 262
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு [TAB]அரவப் பகையூர் தியவ னுடைய குரவிற் கொடிமுல் லைகள்நின் றுறங்கும் [TAB]கோவர்த் தனமென்னும் கொற்றக் குடைமேல் திருவிற் பொலிமா மறைவா ணர்புத்தூர்த் [TAB]திகழ்பட் டர்பிரான் சொன்னமா லைபத்தும் பரவு மனநன் குடைப்பத் தருள்ளார் [TAB]பரமா னவைகுந் தம்நண் ணுவரே.
Verse 263
நாவ லம்பெரிய தீவினில் வாழும் [TAB]நங்கை மீர்கள்இதுஓ ரற்புதம் கேளீர் தூவ லம்புரி யுடைய திருமால் [TAB]தூய வாயில் குழலோசை வழியே கோவ லர்சிறுமி யர்இளங் கொங்கை [TAB]குதுக லிப்பஉட லுளவிழ்ந்து எங்கும் காவ லும்கடந் துகயிறு மாலை யாகி [TAB]வந்து கவிழ்ந்துநின் றனரே.
Verse 264
இடவணரை யிடத்தோளொடுசாய்த் [TAB] திருகைகூடப் புருவம்நெரிந்தே குடவயிறுபட வாய்கடைகூடக் [TAB] கோவிந்தன் குழல்கொடடூதினபோது மடமயில்களோடு மான்பிணைபோலே [TAB] மங்கைமார்கள் மலர்க்கூந்தலவிழ உடைநெகிழ வோர்கையால்துகில்பற்றி [TAB] யொல்கி யோடரிக்க ணோடநின்றனரே.
Verse 265
வானிள வரசு வைகுந்தக் குட்டன் [TAB] வாசுதே வன்மது ரைமன்னன் நந்த கோனிள வரசு கோவலர் குட்டன் [TAB] கோவிந்தன் குழல்கொடு ஊதின போது வானிளம் படியர் வந்துவந் தீண்டி [TAB] மனமுரு கிமலர்க் கண்கள் பனிப்ப தேனள வுசெறி கூந்த லவிழச் [TAB] சென்னிவேர்ப் பச்செவி சேர்த்துநின் றனரே.
Verse 266
தேனுகன் பிலம்பன் காளிய னென்னும் [TAB] தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி கான கம்படி உலாவி யுலாவிக் [TAB] கருஞ்சிறுக் கன்குழ லூதின போது மேனகை யொடுதி லோத்தமை அரம்பை [TAB] உருப்பசி யரவர் வெள்கி மயங்கி வானகம் படியில் வாய்திறப் பின்றி [TAB] ஆடல் பாடலவை மாறினர் தாமே.
Verse 267
முன்நர சிங்கம தாகி அவுணன் [TAB]முக்கி யத்தை முடிப்பான்மூ வுலகில் மன்னரஞ் சும்மது சூதனன் வாயில் [TAB]குழலி னோசை செவி யைப்பற்றி வாங்க நன்ன ரம்புடைய தும்புரு வோடு [TAB]நாரதனும் தம்தம் வீணை மறந்து கின்ன ரமிது னங்களும் தம்தம் [TAB]கின்ன ரம்தொடு கிலோமென் றனரே.
Verse 268
செம்பெ ருந்தடங் கண்ணன்திரள் தோளன் [TAB] தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் நம்பர மன்இந் நாள்குழ லூதக் [TAB] கேட்டவர் கள்இட ருற்றன கேளீர் அம்பரம் திரியும் காந்தப்ப ரெல்லாம் [TAB] அமுத கீதவலை யால்சுருக் குண்டு நம்பர மன்றென்று நாணி மயங்கி [TAB] நைந்து சோர்ந்துகைம் மறித்துநின் றனரே.
Verse 269
புவியுள்நான் கண்டதோ ரற்புதம் கேளீர் [TAB]பூணி மேய்க்கும்இளங் கோவலர் கூட்டத்து அவையுள் நாகத் தணையான்குழ லூத [TAB]அமர லோகத் தளவும்சென் றிசைப்ப அவியுணா மறந்து வானவ ரெல்லாம் [TAB]ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து [TAB]கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே.
Verse 270
சிறுவி ரல்கள் தடவிப்பரி மாறச் [TAB] செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிக்க குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக் [TAB] கோவிந்தன் குழல்கொடு ஊதின போது பறவையின் கணங்கள் கூடு துறந்து [TAB] வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் [TAB] கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே.
Verse 271
திரண்டெ ழுதழை மழைமுகில் வண்ணன் [TAB]செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே சுருண்டி ருண்டகுழல் தாழ்ந்த முகத்தான் [TAB]ஊது கின்றகுழ லோசை வழியே மருண்டுமான் கணங்கள் மேய்கை மறந்து [TAB]மேய்ந்த புல்லும்கடை வாய்வழி சோர இரண்டு பாடும்துலங் காப்புடை பெயரா [TAB]எழுதுசித் திரங்கள் போல நின்றனவே.
Verse 272
கருங்கண் தோகைமயிற் பீலி யணிந்து [TAB]கட்டிநன் குடுத்த பீதக வாடை அருங்கல வுருவி னாயர் பெருமான் [TAB]அவனொரு வன்குழ லூதின போது மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும் [TAB]மலர்கள் வீழும்வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற [TAB]பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே.
Verse 273
குழலி ருண்டுசுருண் டேறிய குஞ்சிக் [TAB]கோவிந்த னுடைய கோமள வாயில் குழல்மு ழைஞ்சுகளி னூடு குமிழ்த்துக் [TAB]கொழித்தி ழிந்தஅமு தப்புனல் தன்னை குழல்முழ வம்விளம் பும்புது வைக்கோன் [TAB]விட்டு சித்தன் விரித்ததமிழ் வல்லார் குழலை வென்றகுளிர் வாயின ராகிச் [TAB]சாது கோட்டியுள் கொள்ளப்படு வாரே.
Verse 274
ஐய புழுதி உடம்ப ளைந்துஇவள் பேச்சு மலந்த லையாய் செய்ய நூலின் சிற்றாடை செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள் கையி னில்சிறு தூதை யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள் பைய ரவணைப் பள்ளி யானோடு கைவைத்து இவள்வருமே.
Verse 275
வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடிகூ டிற்றில சாய்வி லாத குறுந்தலைச் சிலபிள் ளைகளோ டிணங்கி தீயி ணக்கிணங் காடிவந்துஇவள் தன்னன்ன செம்மை சொல்லி மாயன் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே.
Verse 276
பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்கலுறில் சங்கு சக்கரம் தண்டு வாள்வில்லு மல்லது இழைக்க லுறாள் கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில கோவிந்த னோடு இவளை சங்கை யாகிஎன் னுள்ளம் நாள்தொறும் தட்டுளுப் பாகின்றதே.
Verse 277
ஏழை பேதைஓர் பாலகன் வந்துஎன் பெண்மக ளையெள்கி தோழி மார்பலர் கொண்டு போய்ச்செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன் ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி மூழை யுப்பறி யாத தென்னும் மூதுரையு மிலளே.
Verse 278
நாடும் ஊரும் அறிய வேபோய் நல்ல துழாயலங்கள் சூடி நாரணன் போமிட மெல்லாம் சோதித் துழிதருகின்றாள் கேடு வேண்டு கின்றார் பலருளர் கேசவ னோடுஇவளை பாடு காவ லிடுமி னென்றென்று பார்தடு மாறினதே.
Verse 279
பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்துஇவள் பாடக மும்சிலம்பும் இட்ட மாக வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் பொட்டப் போய்ப்புறப் பட்டுநின்றுஇவள் பூவைப்பூ வண்ணா வென்னும் பட்ட வார்குழல் மங்கை மீர்இவள் மாலுறு கின்றாளே.
Verse 280
பேச வும்தெரி யாத பெண்மையின் பேதையேன் பேதைஇவள் கூச மின்றிநின் றார்கள் தம்மெதிர் கோல்கழிந் தான்மூழையாய் கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுக வாய்மொழியாள் வாச வார்குழல் மங்கை மீர்இவள் மாலுறு கின்றாளே.
Verse 281
காறை பூணும் கண்ணாடி காணும்தன் கையில் வளைகுலுக்கும் கூறை யுடுக்கும் அயர்க்கும்தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித் தேறிநின்று ஆயிரம்பேர்த் தேவன் திறம்பி தற்றும் மாறில் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே.
Verse 282
கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணா லங்கள் செய்துஇவளை வைத்து வைத்துக் கொண்டுஎன்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும் செய்த்த லையெழு நாற்றுப் போல்அவன் செய்வன செய்துகொள்ள மைத்த டமுகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே.
Verse 283
பெருப்பெ ருத்தகண் ணாலங்கள்செய்து பேணிநம் மில்லத் துள்ளே இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளும்ஒன் றெண்ணு கின்றாள் மருத்து வப்பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன்முன் ஒருப்ப டுத்திடு மின்இவளை உலகளந் தானி டைக்கே.
Verse 284
ஞால முற்றும்உண்டு ஆலி லைத்துயில் நாரா யணனுக்குஇவள் மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை கோல மார்பொழில் சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன மாலை பத்தும் வல்ல வர்கட்கு இல்லை வருதுயரே.
Verse 285
நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல்பனி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந் தாலொத்த தாலோ இல்லம் வெறியோடிற் றாலோ என்மக ளைஎங்கும் காணேன் மல்லரை யட்டவன் பின்போய் மதுரைப்பு றம்புக்காள் கொலோ.
Verse 286
ஒன்று மறிவொன்றில் லாத உருவறைக் கோபாலர் தங்கள் கன்றுகால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு நன்றும் கிறிசெய்து போனான் நாராய ணன்செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்குஓ ரேச்சுக்சொ லாயிடுங் கொலோ.
Verse 287
குமரி மணம்செய்து கொண்டு கோலம்செய்து இல்லத் திருத்தி தமரும் பிறரும் அறியத் தாமோத ரற்கென்று சாற்றி அமரர் பதியுடைத் தேவி அரசாணி யைவழி பட்டு துமில மெழப்பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ.
Verse 288
ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான் பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமக ளைக்கண்டு கந்து மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.
Verse 289
தம்மாமன் நந்தகோ பாலன் தழீஇக்கொண்டு என்மகள் தன்னை செம்மாந் திரேயென்று சொல்லிச் செழுங்கயற் கண்ணும்செவ் வாயும் கொம்மை முலையும் இடையும் கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு இம்மக ளைப்பெற்ற தாயர் இனித்தரி யாரென்னுங் கொலோ.
Verse 290
வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்துஎன் மகளை கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடிவாழுங் கொலோ நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொலோ.
Verse 291
அண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்றுஎன் மகளை பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகா வல்வைக்குங் கொலோ.
Verse 292
குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன் இடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி கடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் கொலோ.
Verse 293
வெண்ணிறத் தோய்தயிர் தன்னை வெள்வரைப் பின்முன் எழுந்து கண்ணுறங் காதே யிருந்து கடையவும் தான்வல்லள் கொலோ ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந் தான்என் மகளை பண்ணறை யாப்பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ.
Verse 294
மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு ஆயர்கள் சேரியி லும்புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம் தாயவள் சொல்லிய சொல்லைத் தண்புது வைப்பட்டன் சொன்ன தூய தமிழ்ப்பத்தும் வல்லார் தூமணி வண்ணற்கா ளாரே.
Verse 295
என்னாதன் தேவிக்குஅன்று இன்பப்பூ ஈயாதாள் தன்நாதன் காணவே தண்பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன் வன்மையைப் பாடிப்பற [TAB]எம்பிரான் வன்மையைப் பாடிப்பற.
Verse 296
என்வில் வலிகண்டு போவென்று எதிர்வந்தான் தன்வில்லி னோடும் தவத்தை எதிர்வாங்கி முன்வில்வலித்து முதுபெண் ணுயிருண்டான் தன்வில்லின் வன்மையைப் பாடிப்பற [TAB]தாசரதி தன்மையைப் பாடிப்பற.
Verse 297
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற்றங் கேக விரைந்துஎதிர் வந்து செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற [TAB]தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.
Verse 298
மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்றுஅழ கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம்போன சீற்றமிலாதானைப் பாடிப்பற [TAB]சீதை மணாளனைப் பாடிப்பற.
Verse 299
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்தநல் பொய்கைபுக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற [TAB]அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.
Verse 300
முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டுஉன் அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரதநம் பிக்குஅன்று அடிநிலை யீந்தானைப் பாடிப்பற [TAB]அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.
Verse 301
காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டுஅவன் நீள்முடி யைந்திலும் நின்று நடம்செய்து மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் தோள்வலி வீரமே பாடிப்பற [TAB]தூமணி வண்ணனைப் பாடிப்பற.
Verse 302
தார்க்குஇளந் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கிடைச் சூர்ப்ப ணகாவைச் செவியொடு மூக்குஅவ ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற [TAB]அயோத்திக் கரசனைப் பாடிப்பற.
Verse 303
மாயச் சகட முதைத்து மருதிறுத்து ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்துஅணி வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற [TAB]ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற.
Verse 304
காரார் கடலை யடைத்திட்டு இலங்கைபுக்கு ஓராதான்பொன்முடி ஒன்பதோ டொன்றையும் நேரா அவன்தம்பிக் கேநீ ளரசீந்த ஆரா வமுதனைப் பாடிப்பற [TAB]அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.
Verse 305
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல் செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல் ஐந்தினோ டைந்தும்வல் லார்க்குஅல்ல லில்லையே.
Verse 306
நெறிந்தகருங் குழல்மடவாய் நின்னடியேன் விண்ணப்பம் செறிந்தமணி முடிச்சனகன் சிலையிறுத்து நினைக்கொணர்ந்தது அறிந்துஅரசு களைகட்ட அருந்தவத்தோன் இடைவிலங்க செறிந்தசிலை கொடுதவத்தைச் சிதைத்ததும்ஓ ரடையாளம்.
Verse 307
அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே எல்லியம்போ தினிதிருத்தல் இருந்ததோ ரிடவகையில் மல்லிகைமா மாலைகொண்டுஅங்கு ஆர்த்ததும்ஓ ரடையாளம்.
Verse 308
கலக்கியமா மனத்தனளாய்க் கைகேசி வரம்வேண்ட மலக்கியமா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய குலக்குமரா காடுறையப் போஎன்று விடைகொடுப்ப இலக்குமணன் தன்னொடும்அங்கு ஏகியதுஓ ரடையாளம்.
Verse 309
வாரணிந்த முலைமடவாய் வைதேவீ விண்ணப்பம் தேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய் கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில் சீரணிந்த தோழமையைக் கொண்டதும்ஓ ரடையாளம்.
Verse 310
மானமரு மெல்நோக்கி வைதேவீ விண்ணப்பம் கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழிற்சாரல் சித்திரகூ டத்துஇருப்ப பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும்ஓ ரடையாளம்.
Verse 311
சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்னபயம் என்றுஅழைப்ப அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓ ரடையாளம்.
Verse 312
மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம் பொன்னொத்த மானொன்று புகுந்துஇனிது விளையாட நின்னன்பின் வழிநின்று சிலைபிடித்துஎம் பிரான்ஏக பின்னேஅங்கு இலக்குமணன் பிரிந்ததும்ஓ ரடையாளம்.
Verse 313
மைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம் ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட அத்தகுசீ ரயோத்தியர்கோன் அடையாள மிவைமொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே.
Verse 314
திக்குநிறை புகழாளன் தீவேள்விச் சென்றநாள் மிக்கபெருஞ் சபைநடுவே வில்லிறுத்தான் மோதிரம்கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான்என்று உச்சிமேல் வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே.
Verse 315
வாராரும் முலைமடவாள் வைதேவி தனைக்கண்டு சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம் பாராரும் புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான் பாடல்வல்லார் ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.
Verse 316
கதிரா யிரமிரவி கலந்தெரித் தாலொத்த நீள்முடியன் எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் அதிரும் கழற்பொருதோள் இரணிய னாகம் பிளந்துஅரியாய் உதிர மளைந்தகையோ டிருந்தானை உள்ளவா கண்டாருளர்.
Verse 317
நாந்தகம் சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம் ஏந்துபெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் காந்தள்முகிழ்விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க வேந்தர்தலைவஞ் சனகராசன்தன் வேள்வியில் கண்டாருளர்.
Verse 318
கொலையானைக் கொம்புபறித்துக் கூடலர்சேனை பொருதழிய சிலையால் மராமர மெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் தலையால் குரக்கினம்தாங்கிச்சென்று தடவரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்.
Verse 319
தோயம் பரந்த நடுவுசூழலில் தொல்லை வடிவுகொண்ட மாயக் குழவியதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன் ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும் வீயப் பொருது வியர்த்துநின்றானை மெய்ம்மையே கண்டாருளர்.
Verse 320
நீரேறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகஞ் செய்யநின்ற திருமாலை நாடுதிரேல் வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு தேரேற்றி சேனை நடுவுபோர் செய்யச்சிக்கெனக் கண்டாருளர்
Verse 321
பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப் புணர்முலை வாய்மடுக்க வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல் பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறிதுவரை எல்லாரும்சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.
Verse 322
வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன் உள்ள விடம்வினவில் உமக்குஇறை வம்மின் சுவடுரைக்கேன் வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று கள்ளப் படைத்துணை யாகிப்பாரதம் கைசெய்யக் கண்டாருளர்
Verse 323
நாழிகை கூறிட்டுக் காத்துநின்ற அரசர்கள் தம்முகப்பே நாழிகை போகப் படைபொருதவன் தேவகி தன்சிறுவன் ஆழிகொண்டு அன்றுஇரவி மறைப்பச் சயத்திர தன்தலையை பாழி லுருளப் படைபொருதவன் பக்கமே கண்டாருளர்.
Verse 324
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவுமெல்லாம் திண்ணம் விழுங்கியுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் எண்ணற் கரியதோ ரேனமாகி இருநிலம் புக்கிடந்து வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்.
Verse 325
கரிய முகில்புரை மேனிமாயனைக் கண்ட சுவடுரைத்து புரவி முகம்செய்து செந்நெலோங்கி விளைகழ னிப்புதுவை திருவிற்பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலைபத்தும் பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே.
Verse 326
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை குலம்பாழ் படுத்துக் குலவிளக் காய்நின்ற கோன்மலை சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்க ளாடும்சீர் சிலம்பாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.
Verse 327
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித் தான்பொருந் தும்மலை எல்லா விடத்திலும் எங்கும் பரந்துபல் லாண்டொலி செல்லா நிற்கும் சீர்த்தென் திருமாலிருஞ் சோலையே.
Verse 328
தக்கார்மிக் கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை எக்கால மும்சென்று சேவித் திருக்கும் அடியரை அக்கா னெறியை மாற்றும் தண்மாலிருஞ் சோலையே.
Verse 329
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம் கோனார்க் கொழியக் கோவர்த் தனத்துச்செய் தான்மலை வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.
Verse 330
ஒருவாரணம் பணிகொண்டவன் பொய்கையில் கஞ்சன்தன் ஒருவாரணம் உயிருண்டவன் சென்றுறை யும்மலை கருவாரணம் தன்பிடிதுறந் தோட கடல்வண்ணன் திருவாணைகூறத் திரியும் தண்மாலிருஞ் சோலையே.
Verse 331
ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை சாவத் தகர்த்த சாந்தணி தோள்சது ரன்மலை ஆவத் தனமென்று அமரர் களும்நன் முனிவரும் சேவித் திருக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே.
Verse 332
மன்னர் மறுக மைத்துனன் மார்க்குஒரு தேரின்மேல் முன்னங்கு நின்று மோழை யெழுவித்த வன்மலை கொன்னவில் கூர்வேற் கோன்நெடு மாறன்தென் கூடற்கோன் தென்னன் கொண்டாடும் தென்திரு மாலிருஞ் சோலையே.
Verse 333
குறுகாத மன்னரைக் கூடுகலக்கிவெங் கானிடைச் சிறுகால்நெறியே போக்குவிக் கும்செல்வன் பொன்மலை அறுகால் வரிவண்டுகள் ஆயிரநாமம் சொல்லி சிறுகாலைப்பாடும் தென்திரு மாலிருஞ் சோலையே.
Verse 334
சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள் அந்திப் பலிகொடுத்து ஆவத் தனம்செய் அப்பன்மலை இந்திர கோபங்கள் எம்பெரு மான்கனி வாயொப்பான் சிந்தும் புறவில் தென்திரு மாலிருஞ் சோலையே.
Verse 335
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார் விட்டு விளங்க வீற்றிருந்த விமலன்மலை பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலைவாய்த் தெட்டித்திளைக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே.
Verse 336
மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலைதன்னை கருதி யுறைகின்ற கார்க்கடல் வண்ணனம் மான்தன்னை விரதம்கொண் டேத்தும் வில்லிபுத் தூர்விட்டு சித்தன்சொல் கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே.
Verse 337
உருப்பிணி நங்கைதன்னை மீட்பான்தொடர்ந் தோடிச்சென்ற உருப்பனை யோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன்மலை பொருப்பிடைக் கொன்றைநின்று முறியாழியும் காசும்கொண்டு விருப்பொடு பொன்வழங்கும் வியன்மாலிருஞ் சோலையதே.
Verse 338
கஞ்சனும் காளியனும் களிறும்மரு தும்எருதும் வஞ்சனை யில்மடிய வளர்ந்தமணி வண்ணன்மலை நஞ்சுமிழ் நாகமெழுந்தணவி நளிர் மாமதியை செஞ்சுடர் நாவளைக்கும் திருமாலிருஞ் சோலையதே.
Verse 339
மன்னு நரகன்தன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்தகடல் வண்ணன்மலை புன்னை செருந்தியொடு புனவேங்கையும் கோங்கும்நின்று பொன்னரி மாலைகள்சூழ் பொழில்மாலிருஞ் சோலையதே.
Verse 340
மாவலி தன்னுடைய மகன்வாணன் மகளிருந்த காவலைக் கட்டழித்த தனிக்காளை கருதும்மலை கோவலர் கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப் பாவொலி பாடிநடம் பயில்மாலிருஞ் சோலையதே.
Verse 341
பலபல நாழம்சொல்லிப் பழித்தசிசு பாலன்தன்னை அலவலை மைதவிர்த்த அழகன்அலங் காரன்மலை குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே.
Verse 342
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருகத் தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே
Verse 343
கனங்குழை யாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள் இனம்கழு வேற்றுவித்த எழில்தோள்எம் பிராமன்மலை கனம்கொழி தெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல் ஞாலமெல்லாம் இனம்குழு வாடும்மலை எழில்மாலிருஞ் சோலையதே
Verse 344
எரிசித றும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரிசிலை வாயில்பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த அரைய னமரும்மலை அமரரொடு கோனும்சென்று திரிசுடர் சூழும்மலை திருமாலிருஞ் சோலையதே.
Verse 345
கோட்டுமண் கொண்டிடந்து குடங்கையில்மண் கொண்டளந்து மீட்டுமதுண் டுமிழ்ந்து விளையாடு விமலன்மலை ஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறையென்று ஓட்டரும் தண்சிலம்பாறுடை மாலிருஞ் சோலையதே.
Verse 346
ஆயிரம் தோள்பரப்பி முடியாயிரம் மின்னிலக ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை ஆயிர மாறுகளும் சுனைகள்பல வாயிரமும் ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே.
Verse 347
மாலிருஞ் சோலையென்னும் மலையையுடை யமலையை நாலிரு மூர்த்திதன்னை நால்வேதக் கடலமுதை மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளில் மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனவே.
Verse 348
நாவகாரியம் சொல்லிலாதவர் நாள்தொறும்விருந் தோம்புவார் தேவகாரியம் செய்துவேதம் பயின்றுவாழ்திருக் கோட்டியூர் மூவர்காரிய மும்திருத்தும் முதல்வனைச்சிந்தி யாதஅப் பாவகாரிக ளைப்படைத்தவன் எங்ஙனம்படைத் தான்கொலோ.
Verse 349
குற்றமின்றிக் குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனு கூலராய் செற்றமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர் துற்றியேழுல குண்டதூமணி வண்ணன்தன்னைத் தொழாதவர் பெற்றதாயர் வயிற்றினைப்பெரு நோய்செய்வான்பிறந் தார்களே.
Verse 350
வண்ணநல்மணி யும்மரகதமும் அழுத்தி நிழலெழும் திண்ணைசூழ்திருக் கோட்டியூர்த்திரு மாலவன்திரு நாமங்கள் எண்ணக்கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகி லாதுபோய் உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம் உந்துகின் றார்களே.
Verse 351
உரகமெல்லணை யான்கையில் உறை சங்கம்போல்மட வன்னங்கள் நிரைகணம்பரந் தேறும்செங்கம லவயல்திருக் கோட்டியூர் நரகநாசனை நாவிற்கொண்டழை யாதமானிட சாதியர் பருகுநீரும் உடுக்குங்கூறையும் பாவம்செய்தன தாங்கொலோ.
Verse 352
ஆமையின் முதுகத்திடைக் குதிகொண்டு தூமலர் சாடிப்போய் தீமைசெய்துஇள வாளைகள்விளை யாடுநீர்த்திருக் கோட்டியூர் நேமிசேர்தடங் கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடை பூமிபாரங்க ளுண்ணும்சோற்றினை வாங்கிப்புல்லைத் திணிமினே.
Verse 353
பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால் ஏதமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர் நாதனைநர சிங்கனைநவின் றேத்துவார்க ளுழக்கிய பாததூளி படுதலால்இவ் வுலகம்பாக்கியம் செய்ததே.
Verse 354
குருந்தமொன்றொசித் தானொடும்சென்று கூடியாடி விழாச்செய்து திருந்துநான்மறை யோர்இராப்பகல் ஏத்திவாழ்திருக் கோட்டியூர் கருந்தடமுகில் வண்ணனைக்கடைக் கொண்டுகைதொழும் பத்தர்கள் இருந்தவூரி லிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய் தார்கொலோ.
Verse 355
நளிர்ந்தசீலன் நயாசலனபிமானதுங்கனை நாடொறும் தெளிந்தசெல்வனைச் சேவகஙகொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர் குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள் விளைந்த்தானியமு மிராக்கர் மீதுகொள்ளகிலார்களே.
Verse 356
கொம்பினார்பொழில் வாய்குயிலினம் கோவிந்தன்குணம் பாடுசீர் செம்பொனார்மதிள் சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர் நம்பனைநர சிங்கனைநவின் றேத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான்தன சின்னங்கள்இவ ரிவரென்றுஆசைகள் தீர்வனே.
Verse 357
காசின்வாய்க்கரம் விற்கிலும்கர வாதுமாற்றிலி சோறிட்டு தேசவார்த்தைப டைக்கும்வண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர் கேசவாபுரு டோத்தமாகிளர் சோதியாய்குற ளாஎன்று பேசுவார்அடி யார்கள்எந்தம்மை விற்கவும் பெறுவார்களே.
Verse 358
சீதநீர்புடை சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர் ஆதியானடி யாரையும்அடி மையின்றித்திரி வாரையும் கோதில்பட்டர் பிரான்குளிர்புது வைமன்விட்டு சித்தன்சொல் ஏதமின்றிஉ ரைப்பவர் இருடீகேசனுக் காளரே.
Verse 359
ஆசை வாய்ச்சென்ற சிந்தைய ராகி அன்னை அத்தன்என் புத்திரர் பூமி வாச வார்குழ லாளென்று மயங்கி மாளு மெல்லைக்கண் வாய்திற வாதே கேச வாபுரு டோத்தமா என்றும் கேழ லாகிய கேடிலீ என்றும் பேசு வாரவர் எய்தும் பெருமை பேசு வான்புகில் நம்பர மன்றே.
Verse 360
சீயினால் செறிந்தேறிய புண்மேல் செற்ற லேறிக் குழம்பிருந்து எங்கும் ஈயினால்அரிப் புண்டு மயங்கி எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம் வாயி னால்நமோ நாரணா வென்று மத்த கத்திடைக் கைகளைக் கூப்பி போயினால் பின்னை இத்திசைக்கு என்றும் பிணைக்கொ டுக்கிலும் போகவொட் டாரே.
Verse 361
சோர்வினால் பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து ஆர்வி னாவிலும் வாய்திற வாதே அந்தக் காலம்அடைவதன் முன்னம் மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாத வனென்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.
Verse 362
மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல்மி டற்றினை உள்ளெழவாங்கி காலுங் கையும் விதிர்விதிர்த் தேறிக் கண்ணு றக்கம தாவதன் முன்னம் மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதி ராகில் விண்ண கத்தினில் மேவலு மாமே.
Verse 363
மடிவ ழிவந்து நீர்புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே கடைவ ழிவாரக் கண்ட மடைப்பக் கண்ணு றக்கம தாவதன் முன்னம் தொடைவ ழிஉம்மை நாய்கள் கவரா சூலத் தால்உம்மைப் பாய்வதும் செய்யார் இடைவ ழியில்நீர் கூறையும் இழவீர் இருடீ கேசனென் றேத்தவல் லீரே.
Verse 364
அங்கம் விட்டவை யைந்து மகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை சங்கம் விட்டவர் கையை மறித்துப் பைய வேதலை சாய்ப்பதன் முன்னம் வங்கம் விட்டுல வும்கடற் பள்ளி மாய னைமது சூதனை மார்பில் தங்க விட்டுவைத்து ஆவதோர் கருமம் சாதிப் பார்க்குஎன்றும் சாதிக்க லாமே.
Verse 365
தென்ன வன்தமர் செப்ப மிலாதார் சேவ தக்குவார் போலப் புகுந்து பின்னும் வன்கயிற் றால்பிணித் தெற்றிப் பின்முன் னாக இழுப்பதன் முன்னம் இன்ன வன்இனை யானென்று சொல்லி எண்ணி உள்ளத் திருளற நோக்கி மன்ன வன்மது சூதன னென்பார் வான கத்துமன் றாடிகள் தாமே.
Verse 366
கூடிக் கூடிஉற் றார்கள் இருந்து குற்றம் நிற்கநற் றங்கள் பறைந்து பாடிப் பாடிஓர் பாடையி லிட்டு நரிப்ப டைக்குஒரு பாகுடம் போலே கோடி மூடி யெடுப்பதன் முன்னம் கெளத்து வமுடைக் கோவிந்த னோடு கூடி யாடிய உள்ளத்த ரானால் குறிப்பி டம்கடந் துஉய்யலு மாமே.
Verse 367
வாயொ ருபக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற தாய்ஒ ருபக்கம் தந்தைஒரு பக்கம் தார மும்ஒரு பக்கம் அலற்ற தீஓ ருபக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற மாய்ஒ ருபக்கம் நிற்கவல் லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.
Verse 368
செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபி ரான்மேல் பத்த ராயிறந் தார்பெறும் பேற்றைப் பாழித் தோள்விட்டு சித்தன்புத் தூர்க்கோன் சித்தம் நன்கொருங் கித்திரு மாலைச் செய்த மாலை இவைபத்தும் வல்லார் சித்தம் நன்கொருங் கித்திரு மால்மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே.
Verse 369
காசும் கறையுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும் ஆசையி னால்அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள் கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ நாயகன் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
Verse 370
அங்கொரு கூறை அரைக்கு டுப்பத னாசையால் மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள் செங்க ணெடுமால் சிரீதரா என்றுஅ ழைத்தக்கால் நங்கைகாள் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
Verse 371
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய் வான்பிறர் பேரிட்டீர் பிச்சைபுக் காகிலும் எம்பி ரான்திரு நாமமே நச்சுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
Verse 372
மானிட சாதியில் தோன்றிற்றுஓர் மானிட சாதியை மானிட சாதியின் பேரிட் டால்மறு மைக்கில்லை வானுடை மாதவா கோவிந் தாஎன்று அழைத்தக்கால் நானுடை நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
Verse 373
மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர்மல வூத்தையை மலமுடை யூத்தையின் பேரிட் டால்மறு மைக்கில்லை குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால் நலமுடை நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
Verse 374
நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே சாடிறப் பாய்ந்த தலைவா தாமோ தராஎன்று நாடுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
Verse 375
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டுஅங்கு எண்ணமொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள் கண்ணுக் கினிய கருமுகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
Verse 376
நம்பி பிம்பியென்று நாட்டு மானிடப் பேரிட்டால் நம்பும் பிம்புமெல் லாம்நாலு நாளில் அழுங்கிப்போம் செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட் டழைத்தக்கால் நம்பிகாள் நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
Verse 377
ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல்உங்கள் மூத்திரப் பிள்ளையை என்முகில் வண்ணன் பேரிட்டு கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ நாத்தகு நாரணன் தம்அன் னைநர கம்புகாள்.
Verse 378
சீரணி மால்திரு நாம மேயிடத் தேற்றிய வீரணி தொல்புகழ் விட்டு சித்தன் விரித்த ஓரணி யொண்தமிழ் ஒன்பதோ டொன்றும் வல்லவர் பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே.
Verse 379
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய் எங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும் கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கடி நகரே.
Verse 380
சலம்பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின் மால்புரு டோத்தமன் வாழ்வு நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்து ழாயும் கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.
Verse 381
அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழிகொண் டெறிந்துஅங்கு எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம்புரு டோத்தம னிருக்கை சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி கதிர்முக மணிகொண் டிழிபுனல் கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.
Verse 382
இமையவர் இறுமாந் திருந்தர சாள ஏற்றுவந் தெதிர்பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம்புரு டோத்தமன் நகர்தான் இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத் தாட கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.
Verse 383
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும் மழுவொடு வாளும் படைக்கல முடைய மால்புரு டோத்தமன் வாழ்வு எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழு தளவினில் எல்லாம் கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.
Verse 384
தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிர தம்குடைந் தாட கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.
Verse 385
விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந் தவன்தலை சாடி மற்பொரு தெழப்பாய்ந்து அரையன யுதைத்த மால்புரு டோத்தமன் வாழ்வு அற்புத முடையஅயி ராவத மதமும் அவரிளம் படியரொண் சாந்தும் கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.
Verse 386
திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென் னும்கடி நகரே.
Verse 387
வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.
Verse 388
மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கிமூன் றெழுத்தை ஏன்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்நன் குடைய எம்புரு டோத்தம னிருக்கை மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான் கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.
Verse 389
பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுரு டோத்தம னடிமேல் வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன் விட்டுசித் தன்விருப் புற்று தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந் தகணக் காமே.
Verse 390
மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர் தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்கும் போதில்வைத்த தேன்சொரியும் புனலரங்க மென்பதுவே.
Verse 391
பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர் மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார் சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே.
Verse 392
மருமகன்தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர் திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே.
Verse 393
கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்வாய்க் கடியசொல்கேட்டு ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய கான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர் தேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே.
Verse 394
பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை உருவரங்கப் பொருதழித்துஇவ் வுலகினைக்கண் பெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ் திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே.
Verse 395
கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர் தாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து யாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே.
Verse 396
கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர் தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே.
Verse 397
வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய் எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர் எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி மல்லிகைவெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே.
Verse 398
குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல் நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர் குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே.
Verse 399
பருவரங்க ளவைபற்றிப் படையாலித் தெழுந்தானை செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல் திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு இருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே.
Verse 400
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழச் செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட திருமால் கோயில் திருவடிதன் திருஉருவும் திருமங்கை மலர்க்கண்ணும் காட்டி நின்று உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஒலிசலிக்கும் ஒளி அரங்கமே
Verse 401
தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே?
Verse 402
கருள் உடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டு ஓசை கேட்டான் இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே
Verse 403
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும் மதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் புது நாள்மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றிற் பூவே போல்வான் பொது-நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே
Verse 404
ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான் சேமம் உடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே
Verse 405
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில் பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை-விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே
Verse 406
குறள் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பு அதக்கி அரசுவாங்கி இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில் எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு அணையின் சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே
Verse 407
உரம் பற்றி இரணியனை உகிர்-நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிச் சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க வாய் அலறத் தெழித்தான் கோயில் உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண் அரங்கமே
Verse 408
தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி குறளும் ஆகி மூஉருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடிப் பூஅணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே
Verse 409
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செயும் நாந்தம் என்னும் ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கை யாளன் இரவு ஆளன் பகலாளன் எனையாளன் ஏழு உலகப் பெரும் பேராளன் திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே
Verse 410
கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில் தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத் திருப்பதியின் மேல் மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே
Verse 411
துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால் எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
Verse 412
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தி னானே நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்த மர்கள் போமிடத்து உன்திறத்து எத்த னையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை ஆமிடத் தேஉன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
Verse 413
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே சொல்லலாம் போதேஉன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
Verse 414
ஒற்றை விடைய னும்நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே முற்ற உலகெல்லாம் நீயே யாகி மூன்றெழுத் தாய முதல்வ னேயா அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்ற லுற்ற அற்றைக்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
Verse 415
பையர வினணைப் பாற்க டலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றி னாய்நான் முகனை வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் கால னையும் உடனே படைத்தாய் ஐய இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
Verse 416
தண்ணென வில்லை நமன்த மர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர் மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும்ஆ காசமு மாகி நின்றாய் எண்ணலாம் போதேஉன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் அண்ணலே நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
Verse 417
செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயக னேஎம் மானே எஞ்ச லிலென்னு டையின் னமுதே ஏழுல குமுடை யாய்என் னப்பா வஞ்ச வுருவின் நமன்த மர்கள் வலிந்து நலிந்துஎன்னைப் பற்றும் போது அஞ்சலை மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
Verse 418
நான்ஏதும் உன்மாய மொன்ற றியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகேயென்று மோதும் போதுஅங் கேதும்நான் உன்னை நினைக்க மாட்டேன் வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மாமாய னேஎன் ஆனாய்நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
Verse 419
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவ னேஎம் மானே அன்று முதல்இன் றறுதி யாக ஆதியஞ் சோதி மறந்த றியேன் நன்றும் கொடிய நமன்த மர்கள் நலிந்து வலிந்துஎன்னைப் பற்றும் போது அன்றங்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
Verse 420
மாய வனைமது சூதனன் தன்னை மாதவ னைமறை யோர்க ளேத்தும் ஆயர்க ளேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை வேயர் புகழ் வில்லிபுத் தூர்மன் விட்டுசித் தன்சொன்ன மாலை பத்தும் தூய மனத்தன ராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர் தாமே.
Verse 421
வாக்குத் தூய்மை யிலாமையி னாலே [TAB]மாத வாஉன்னை வாய்க்கொள்ள மாட்டேன் நாக்கு நின்னையல் லால்அறி யாது [TAB]நான தஞ்சுவன் என்வச மன்று மூர்க்குப் பேசுகின் றானிவ னென்று [TAB]முனிவா யேலும்என் நாவினுக்கு ஆற்றேன் காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் [TAB]கார ணாகரு ளக்கொடி யானே.
Verse 422
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் [TAB]சங்கு சக்கர மேந்துகை யானே பிழைப்ப ராகிலும் தம்மடி யார்சொல் [TAB]பொறுப்ப தும்பெரி யோர்கட னன்றே விழிக்கும் கண்ணிலேன் நின்கண்மற் றல்லால் [TAB]வேறொ ருவரோடு என்மனம் பற்றாது உழைக்குஓர் புள்ளி மிகையன்று கண்டாய் [TAB]ஊழி யேழுல குண்டுமிழ்ந் தானே.
Verse 423
நன்மை தீமைக ளொன்றும் அறியேன் [TAB] நார ணாஎன்னும் இத்தனை யல்லால் புன்மை யால்உன்னைப் புள்ளுவம் பேசிப் [TAB] புகழ்வா னன்றுகண் டாய்திரு மாலே உன்னு மாறுஉன்னை ஒன்றும் அறியேன் [TAB]ஓவா தேநமோ நாரணா என்பன் வன்மை யாவதுஉன் கோயிலில் வாழும் [TAB]வைட்ட ணவனென்னும் வன்மைகண் டாயே.
Verse 424
நெடுமை யால்உல கேழு மளந்தாய் [TAB]நின்ம லாநெடி யாய்அடி யேனைக் குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா [TAB]கூறை சோறுஇவை வேண்டுவ தில்லை அடிமை யென்னுமக் கோயின்மை யாலே [TAB]அங்கங் கேஅவை போதரும் கண்டாய் கொடுமைக் கஞ்சனைக் கொன்றுநின் தாதை [TAB] கோத்த வன்தளை கோள்விடுத் தானே.
Verse 425
தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை [TAB] துடவை யும்கிண றும்இவை யெல்லாம் வாட்ட மின்றிஉன் பொன்னடிக் கீழே [TAB]வளைப்ப கம்வகுத் துக்கொண் டிருந்தேன் நாட்டு மானிடத் தோடுஎனக்கு அரிது [TAB]நச்சு வார்பலர் கேழலொன் றாகி கோட்டு மண்கொண்ட கொள்கையி னானே [TAB] குஞ்ச ரம்வீழக் கொம்பொசித் தானே.
Verse 426
கண்ணா நான்முக னைப்படைத் தானே [TAB] கார ணாகரி யாய்அடி யேன்நான் உண்ணா நாள்பசி யாவதொன் றில்லை [TAB]ஓவா தேநமோ நாரணா வென்று எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத [TAB] நாண்மலர் கொண்டுஉன் பாதம் நண்ணா நாள்அவை தத்துறு மாகில் [TAB]அன்றுஎ னக்குஅவை பட்டினி நாளே.
Verse 427
வெள்ளை வெள்ளத்தின் மேல்ஒரு பாம்பை [TAB]மெத்தை யாகவிரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் [TAB] காண லாங்கொல்என் றாசையி னாலே உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி [TAB]உரோம கூபங்க ளாய்கண்ண நீர்கள் துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் [TAB] சொல்லாய் யான்உன்னைத் தத்துறு மாறே.
Verse 428
வண்ண மால்வரை யேகுடை யாக [TAB]மாரி காத்தவ னேமது சூதா கண்ண னேகரி கோள்விடுத் தானே [TAB]கார ணாகளி றட்டபி ரானே எண்ணு வாரிட ரைக்களை வானே [TAB]ஏத்த ரும்பெருங் கீர்த்தியி னானே நண்ணி நான்உன்னை நாள்தொறும் ஏத்தும் [TAB]நன்மை யேஅருள் செய்எம்பி ரானே.
Verse 429
நம்ப னேநவின் றேத்தவல் லார்கள் [TAB]நாத னேநர சிங்கம தானாய் உம்பர் கோனுல கேழும் அளந்தாய் [TAB] ஊழி யாயினாய் ஆழிமுன் னேந்தி கம்ப மாகரி கோள்விடுத் தானே [TAB] கார ணாகட லைக்கடைந் தானே எம்பி ரான்என்னை யாளுடைத் தேனே [TAB] ஏழை யேனி டரைக்களை யாயே.
Verse 430
காமர் தாதை கருதலர் சிங்கம் [TAB] காண வினிய கருங்குழல் குட்டன் வாம னன்என் மரகத வண்ணன் [TAB] மாத வன்மது சூதனன் தன்னை சேம நன்கம ரும்புது வையர்கோன் [TAB] விட்டு சித்தன் வியந்தமிழ் பத்தும் நாம மென்று நவின்றுரைப் பார்கள் [TAB] நண்ணு வார்ஒல்லை நாரண னுலகே.
Verse 431
நெய்க்குடத் தைப்பற்றி ஏறும் எறும்புகள் போல்நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெறஉய்யப் போமின் மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக்கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே.
Verse 432
சித்திர குத்த னெழுத்தால் தென்புலக் கோன்பொறி யொற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார் முத்துத் திரைக்கடற் சேர்ப்பன்மூதறி வாளர் முதல்வன் பத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே.
Verse 433
வயிற்றில் தொழுவைப் பிரித்துவன்புலச் சேவை யதக்கி கயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.
Verse 434
மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும்ஓர் வல்வினை கண்டீர் இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின் சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் பங்கப் படாதுஉய்யப் போமின்பண்டன்று பட்டினம் காப்பே.
Verse 435
மாணிக் குறளுரு வாய மாயனை என்மனத் துள்ளே பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக் கொண் டேன்பிறி தின்றி மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலிவன் குறும்பர்க ளுள்ளீர் பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.
Verse 436
உற்ற வுறுபிணி நோய்காள் உமக்குஒன்று சொல்லுகேன் கேண்மின் பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினை காள்உமக்கு இங்குஓர் பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.
Verse 437
கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந்துழல் வேனை வங்கக் கடல்வண் ணன்அம்மான் வல்வினை யாயின மாற்றி பங்கப் படாவண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே.
Verse 438
ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்துஎன் னுள்ளே பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமலவன் னெஞ்சம் புகுந்தும்என் சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே.
Verse 439
உறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே சங்கே அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே இறவு படாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள் பறவை யரையா உறகல் பள்ளி யறைக்குறிக் கொண்மின்.
Verse 440
அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரானை பரவுகின் றான்விட்டு சித்தன் பட்டினம் காவற்பொ ருட்டே.
Verse 441
துக்கச் சுழலையைச் சூழ்ந்துகிடந்த வலையை அறப்பறித்து புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண் டேன்இனிப் போகவிடுவதுண்டே மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன்வயிற்றில் சிக்கென வந்து பிறந்துநின் றாய்திரு மாலிருஞ்சோலை யெந்தாய்.
Verse 442
வளைத்துவைத் தேன்இனிப் போகலொட்டேன் உந்த னிந்திர ஞாலங்களால் ஒளித்திடில் நின்திரு வாணைகண் டாய்நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
Verse 443
உனக்குப் பணிசெய் திருக்கும் தவமுடை யேன்இனிப் போய்ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கைநின் சாயை யழிவு கண்டாய் புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டிஉன் பொன்னடி வாழ்கவென்று இனக்குற வர்புதிய துண்ணும் எழில்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
Verse 444
காதம் பலவும் திரிந்துழன் றேற்குஅங்கோர் நிழலில்லை நீருமில்லைஉன் பாத நிழலல்லால் மற்றோ ருயிர்ப்பிடம் நான்எங்கும் காண்கின்றிலேன் தூதுசென் றாய்குரு பாண்டவர்க் காய்அங்கோர் பொய்சுற்றம் பேசிச்சென்று பேதஞ்செய்து எங்கும் பிணம்படுத்தாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்.
Verse 445
காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிகுரல் மேலு மெழாமயிர்க் கூச்சுமறாஎன தோள்களும் வீழ்வொழியா மாலுக ளாநிற்கும் என்மன னேஉன்னை வாழத் தலைப்பெய்திட்டேன் சேலுக ளாநிற்கும் நீள்சுனை சூழ்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
Verse 446
எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திர னும்மற்றும் ஒருத்தரும் இப்பிற வியென்னும் நோய்க்கு மருந்தறி வாருமில்லை மருத்துவ னாய்நின்ற மாமணி வண்ணா மறுபிற விதவிரத் திருத்திஉங் கோயிற் கடைப்புகப் பெய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.
Verse 447
அக்கரை யென்னு மனத்தக் கடலு ளழுந்திஉன் பேரருளால் இக்கரை யேறி யிளைத்திருந் தேனைஅஞ் சேலென்று கைகவியாய் சக்கர மும்தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும் செக்கர் நிறத்துச் சிவப்புடை யாய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்
Verse 448
எத்தனை காலமும் எத்தனை யூழியும் இன்றொடு நாளையென்றே இத்தனை காலமும் போய்க்கிறிப் பட்டேன் இனிஉன்னைப் போகலொட்டேன் மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவ ரைக்கெடுத்தாய் சித்தம்நின் பால தறிதியன் றேதிரு மாலிருஞ் சோலையெந்தாய்.
Verse 449
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்ய லுற்றிருப்பன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச்சக்கரமதனால் தென்றித் திசைதிசை வீழச்செற்றாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்.
Verse 450
சென்றுல கம்குடைந் தாடும் சுனைத்திரு மாலிருஞ் சோலைதன்னுள் நின்ற பிரான்அடி மேல்அடி மைத்திறம் நேர்பட விண்ணப்பஞ்செய் பொன்திகழ் மாடம் பொலிந்துதோன்றும் புதுவைக்கோன் விட்டுசித்தன் ஒன்றினோ டொன்பதும் பாடவல்லார் உல கமளந் தான்தமரே.
Verse 451
சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு தன்னைவாழ நின்றநம்பீ தாமோதரா சதிரா என்னையும் என்னுடைமையையும்உஞ் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே.
Verse 452
பறவையேறு பரம்புருடா நீஎன்னைக் கைக்கொண்டபின் பிறவியென்னும் கடலும்வற்றிப் பெரும்பத மாகின்றதால் இறவுசெய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால் அறிவையென்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே.
Verse 453
எம்மனாஎன் குலதெய்வமே என்னுடைய நாயகனே நின்னுளேனாய்ப் பெற்றநன்மை இவ்வுலகினில் ஆர்பெறுவார் நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம் சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே.
Verse 454
கடல்கடைந்து அமுதம்கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல் உடலுருகி வாய்திறந்து மடுத்துஉன்னை நிறைத்துக்கொண்டேன் கொடுமைசெய்யும் கூற்றமும்என் கோலாடி குறுகப்பெறா தடவரைத்தோள் சக்கரபாணீ சார்ங்கவிற் சேவகனே.
Verse 455
பொன்னைக்கொண்டு உரைகல்மீதே நிறமெழ வுரைத்தாற்போல் உன்னைக்கொண்டுஎன் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன் உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன் என்னப்பாஎன் னிருடீகேசா என்னுயிர்க் காவலனே.
Verse 456
உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழி யாமல்எல்லாம் என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன் மன்னடங்க மழுவலங்கைக் கொண்ட இராமநம்பீ என்னிடைவந்து எம்பெருமான் இனியெங்குப் போகின்றதே.
Verse 457
பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர் குலபதிபோல் திருப்பொலிந்த சேவடிஎஞ் சென்னியின் மேல்பொறித்தாய் மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்றென்றுஉன் வாசகமே உருப்பொலிந்த நாவினேனை உனக்குஉரித் தாக்கினையே.
Verse 458
அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்துஎன் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய் எம்பிரான் நினைந்துஎன்னுள் ளேநின்று நெக்குக்கண்கள் அசும்பொழுக நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன் நேமி நெடியவனே.
Verse 459
பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்றென்று உனக்கிடமா யிருக்கஎன்னை உனக்குஉரித் தாக்கினையே.
Verse 460
தடவரைவாய் மிளிர்ந்துமின்னும் தவளநெடுங் கொடிபோல் சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும்என் சோதிநம்பீ வடதடமும் வைகுந்தமும் மதிள்துவ ராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே.
Verse 461
வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித் தன்மனத்தே கோயில்கொண்ட கோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை ஆயரேற்றை அமரர்கோவை அந்தணர்த மமுதத்தினை சாயைபோலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே.
Key Takeaways & AI Summary
This chapter explores the profound teachings of Periyalwar Thirumozhi — The Sacred Words of Periyalwar. It includes 461 verses detailing core themes like "", "", "".The 4,000 Tamil hymns of the twelve Alwars — the crown jewel of Sri Vaishnava devotional literature, sung at the 108 sacred Divya Desams.