Verse 1
முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல் குருகூரன் மாறன் பேர் கூறு.
Verse 2
முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே, இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ்
Verse 3
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம் எங்கள்மால் கண்டாய் இவை.
Verse 4
இவையன்றே நல்ல இவையன்றே தீய, இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம் என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே, என்னால் செயற்பால தென்?
Verse 5
என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற் றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப் பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று.
Verse 6
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ! மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த நீயம்மா! காட்டும் நெறி.
Verse 7
நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய் எஞ்செய்தா லென்படோம் யாம்?
Verse 8
யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார் தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த அம்மா!நின் பாதத் தருகு.
Verse 9
அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம் பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண்காண்பரிய நுண்புடையீர் நும்மை நுமக்கு.
Verse 10
நுமக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென்?, மாலார் தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால் - எமக்கினி யாதானு மாகிடுகாண் நெஞ்சே! அவர்த்திறத்தே யாதானும் சிந்தித் திரு.
Verse 11
இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,- திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ்.
Verse 12
நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை, வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ, நீரும்நீ யாய்நின்ற நீ.
Verse 13
நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்? போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும் காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.
Verse 14
வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட, இழக்கவும் காண்டும் இறைவ.- இழபுண்டே, எம்மாட் கொண்டாகிலும் யான்வேண்ட, என்கண்கள் தம்மால்காட் டுன்மேனிச் சாய்.
Verse 15
சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே, பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த் தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம் பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.
Verse 16
பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம் பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம் தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய செம்மேனிக் கண்வளர்வார் சீர்.
Verse 17
சீரால் பிறந்து சிறப்பால் வளராது, பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப் புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே? சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.
Verse 18
சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும் வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய, தாள்வரைவில் லேந்தினார் தாம்.
Verse 19
தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக, பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன் தொல்லுருவை யாரறிவார் சொல்லு.
Verse 20
சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே, எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண் மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக, காத்தானைக் காண்டும்நீ காண்.
Verse 21
காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம், நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான், திருவாகம் தீண்டிற்றுச் சென்று.
Verse 22
சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப் பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய, காருருவன் தான்நிமிர்த்த கால்.
Verse 23
காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள், மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால் தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற்றிருக்குமிடம் காணா திளைத்து.
Verse 24
இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன், இளைக்க நமன்தமர்கள் பற்றி - இளைப்பெய்த, நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான், தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.
Verse 25
தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான் தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,- தானே இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால், அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்.
Verse 26
ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார் மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர் இனத்தலைவன் கண்ணனால் யான்.
Verse 27
யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக் கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர் இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த, அருளென்னும் தண்டால் அடித்து.
Verse 28
அடியால் படிகடந்த முத்தோ,அதன்றேல் முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய். செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம், அறிகிலாமால் நீயளந்த அன்று.
Verse 29
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம், இன்றேநாம் காணா திருப்பது வும்,-என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும் உட்கண்ணால் காணு முணர்ந்து.
Verse 30
உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே, இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத் தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால், எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.
Verse 31
இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண் டடியெடுப்ப தன்றோ அழகு?
Verse 32
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான், நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக் குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத் தடங்கடலை மேயார் தமக்கு.
Verse 33
தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார், தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார், யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?
Verse 34
யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ, யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,- யாதானும் தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால் பாறுபா றாக்கினான் பால்.
Verse 35
பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச் சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும், நீதியாய்! நிற்சார்ந்து நின்று.
Verse 36
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும், ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான், அன்புடைய னன்றே யவன்?
Verse 37
அவனாம் இவனாம் உவனாம், மற்றும்ப ரவனாம் அவனென் றிராதே,- அவனாம் அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால், அவனே எவனேலும் ஆம்.
Verse 38
ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே? நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய் மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம் அதுகரமே அன்பால் அமை.
Verse 39
அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே, இமைக்கும் பொழுதும் இடைச்சி - குமைத்திறங்கள், ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே, பேசியே போக்காய் பிழை.
Verse 40
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய், தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால் போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு.
Verse 41
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே, போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை மாய்த்தானை வாழ்தே வலி.
Verse 42
வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர் வலிய முடியிடிய வாங்கி,-வலியநின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே, பன்னாளும் நிற்குமிப் பார்.
Verse 43
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன்படைத்தா னென்பரால்,- பாரிடம் ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு ஆவான் பூகாவால் அவை.
Verse 44
அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே, நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில் மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ, மனத்துயரை மாய்க்கும் வகை.
Verse 45
வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும், மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே, மேலைத்தாம் செய்யும் வினை.
Verse 46
வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி, தினையாம் சிறிதளவும் செல்ல - நினையாது வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும், நாயகத்தான் பொன்னடிகள் நான்.
Verse 47
நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும் தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, நீகதியா நெஞ்சே! நினை.
Verse 48
நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே, நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும் எவ்வளவு முண்டோ எமக்கு.
Verse 49
எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை, அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே, கொன்றானை யேமனத்துக் கொண்டு.
Verse 50
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான் வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள் காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார் பேருருவென் றெம்மைப் பிரிந்து.
Verse 51
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே, திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால் ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல், மாவை பிளந்தார் மனம்.
Verse 52
மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை, சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே, வண்டுழாம் சீராக்கு மாண்பு.
Verse 53
மாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ் சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங் கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா துண்ணவாய் தானுறுமோ ஒன்று.
Verse 54
ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது, உன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில் வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு வைகுந்த மென்றருளும் வான்.
Verse 55
வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம், வன்துயரை யாவா! மருங்கு.
Verse 56
மருங்கோத மோதும் மணிநா கணையார், மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால், மனக்கவலை தீர்ப்பார் வரவு.
Verse 57
வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே! ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும் ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம், மாயவர்தாம் காட்டும் வழி.
Verse 58
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே, தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும் தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள, வாழ்வடங்க மார்விடந்த மால்.
Verse 59
மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால் பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று, மறப்பின்மை யான்வேண்டும் மாடு.
Verse 60
மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார் காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப் போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன் பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.
Verse 61
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய் ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,- பேர்ந்தெங்கும் தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லைகாண் மற்றோர் இறை.
Verse 62
இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள், மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின் தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின் மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.
Verse 63
மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய் வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர் மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான்,நங்கள் பிணிக்காம் பெருமருந்து பின்.
Verse 64
பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய், வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும், பருச்செவியு மீர்ந்த பரன்.
Verse 65
பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில், உரனா லொருமூன்று போதும்,-மரமேழன் றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர் கைதான் தொழாவே கலந்து.
Verse 66
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல் தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை, சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.
Verse 67
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை, மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே! அறிகண்டாய் சொன்னேன் அது.
Verse 68
அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில் அதுவோர் பொருளில்லை யன்றே? - அதுவொழிந்து மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே! கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.
Verse 69
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேன துள்ளத் தகம்.
Verse 70
அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார், முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால் சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை, ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?
Verse 71
அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை, சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே யாதாகில் யாதே இனி.
Verse 72
இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே, தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர் அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு முகத்தான்நின் உந்தி முதல்.
Verse 73
முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் மென்பர் - முதல்வா, நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே, புகரிலகு தாமரையின் பூ.
Verse 74
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை எல்லாம் பிரானுருவே என்று.
Verse 75
என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால், ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே! புடைதான் பெரிதே புவி.
Verse 76
புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென் செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவின்றி யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
Verse 77
உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம், விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள உலகளவு யானும் உளனாவன் என்கொல்? உலகளந்த மூர்த்தி! உரை.
Verse 78
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே, இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம், நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர் சொல்நன்றி யாகும் துணை.
Verse 79
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், - கணைநாணில் ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத வூணாக உண்.
Verse 80
உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே, விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில் ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப் பேராயற் காளாம் பிறப்பு.
Verse 81
பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும் இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம் ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான் பாதமே யேத்தாப் பகல்.
Verse 82
பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,--தகவாத் தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார், செழும்பரவை மேயார் தெரிந்து.
Verse 83
தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில் அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தா தயர்ந்து.
Verse 84
அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன் உயப்போம் நெறியிதுவே கண்டாய், - செயற்பால அல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன் மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
Verse 85
வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத் தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி, எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே, தங்கத்தா னாமேலும் தங்கு.
Verse 86
தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து, எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத் தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்.
Verse 87
கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான், பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை, என்நினைந்து போக்குவரிப் போது.
Verse 88
இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும் எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான் மெய்கழலே ஏத்த முயல்.
Key Takeaways & AI Summary
This chapter explores the profound teachings of Periya Thiruvandhadhi — The Great Sacred Linked Verses. It includes 88 verses detailing core themes like "", "", "".The 4,000 Tamil hymns of the twelve Alwars — the crown jewel of Sri Vaishnava devotional literature, sung at the 108 sacred Divya Desams.