Verse 1
அன்ன வயல்புதுமை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை திருப்பதிகம் — இன்னிசையால் பாடிக் கொடுத்தாணற் பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்.
Verse 2
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை பாடி அருளவல்ல பல் வளையாய் – நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாங் கடவா வண்ணமே நல்கு!
Verse 3
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
Verse 4
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரம னடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
Verse 5
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
Verse 6
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல் ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில் ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
Verse 7
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
Verse 8
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
Verse 9
கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.
Verse 10
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
Verse 11
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
Verse 12
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
Verse 13
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
Verse 14
கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
Verse 15
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
Verse 16
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
Verse 17
எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள் வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
Verse 18
நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
Verse 19
அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.
Verse 20
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
Verse 21
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய் மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
Verse 22
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய் செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய் செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய் உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
Verse 23
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண் ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
Verse 24
அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
Verse 25
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன் கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
Verse 26
அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
Verse 27
ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
Verse 28
மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
Verse 29
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
Verse 30
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம் அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம் குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
Verse 31
சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன் பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
Verse 32
வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
Key Takeaways & AI Summary
This chapter explores the profound teachings of Thiruppavai — The Sacred Vow. It includes 32 verses detailing core themes like "", "", "".The 4,000 Tamil hymns of the twelve Alwars — the crown jewel of Sri Vaishnava devotional literature, sung at the 108 sacred Divya Desams.